Main Menu

பிரிட்டனில் மோப்ப நாய்களைக் கொண்டு கிருமித்தொற்றை அடையாளம் காணும் முயற்சி

நாய்கள் மோப்பத் திறனுக்குப் பெயர்பெற்றவை.

காவல்துறை, சுங்கத்துறை எனப் பல துறைகளின் அதிகாரிகளுக்குக் குற்றங்களைக் கண்டறியும் பணியில் அந்தத் திறன் பெரிதும் பயன்படுவது நாம் அறிந்ததே.

இப்போது அதனைப் பயன்படுத்தி, COVID-19 கிருமித்தொற்றைக் கண்டறிய முயற்சி செய்கிறது, பிரிட்டனில் செயல்படும் அறநிறுவம் ஒன்று.

லண்டனின் சுகாதார, மருத்துவப் பள்ளி, Durham பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்களுடன் இணைந்து அந்தப் பணியில் அது ஈடுபட்டுள்ளது.

இதற்கு முன்னர் மலேரியா பாதிப்பைக் கண்டறிய நாய்களின் மோப்பத் திறனைப் பயன்படுத்துவது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு நோயும் பாதிக்கப்பட்டவரிடமிருந்து தனிப்பட்ட வாடை வீசச் செய்யும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அத்தகைய ஆய்வுகள் நடத்தப்பட்டன.

அதேபோல் இப்போது COVID-19 கிருமித்தொற்று தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோப்ப நாய்களுக்கு 6 வாரம் பயிற்சி அளிக்கப்படும். முயற்சி வெற்றியடைந்தால் விரைவாகவும், மருத்துவக் கருவிகளின் துணையின்றியும் கிருமித்தொற்றைக் கண்டறிய முடியும் என்பதை அறநிறுவனம் சுட்டியது.

ஏற்கனவே புற்றுநோய், பார்க்கின்சன்ஸ் நோய்(Parkinson’s), சிலவகை பாக்டீரியாத் தொற்று போன்றவற்றைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்களுக்குப் பயிற்சி கொடுத்த அனுபவம் அதற்கு உண்டு.

ஒருவருக்குக் காய்ச்சல் உள்ளதா என்பதையும் நாய்கள் மோப்பசக்தியின் மூலம் கண்டுபிடித்துவிடுமாம்.

அறிகுறிகள் தோன்றும் முன்பாகவே, நாய்கள் மூலம் கிருமித்தொற்றுக்கு ஆளானோரைக் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க இந்த முறை உதவும் என்கின்றனர் அறநிறுவனத்தார். 

பகிரவும்...