Main Menu

தவக்காலம் என்றால் என்ன?

தவக்காலம் என்றால்: சுருங்கக்கூறின் எம் ஆன்மாவின் ஏற்றத்திற்காக ஆண்டவரால் வழங்கப்பட்ட அருமையான காலமேயாகும். இறைவிருப்பத்தை வாழ்வில் ஏற்று அதன் படி வாழ்ந்து கடவுளோடும் மனிதரோடும் ஒப்புரவாவதற்கான காலமே தவக்காலமாகும். நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை எம் ஆன்மீகத் தேடலை வழிப்படுத்தி வலுப்படுத்தி வளப்படுத்த வல்லதேவன் தரும் காலமே தவக்காலம் என்று உறுதியாகக் கூறலாம்.

தவக்காலத்தின் தொடக்க நாளான புதனை திருநீற்று புதன் அல்லது சாம்பல் புதன் என்று கத்தோலிக்கர் அழைப்பர். இன்றைய தினம் திருப்பலிப் பூசையில் பங்கு கொள்பவர்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளம் இடப்படுகின்றது. நாம் மண்ணுக்குரியவர்கள் மண்ணுக்கே திரும்பவேண்டும் என்பதை நினைவுபடுத்ததுவதற்கே சிலுவை அடையாளம் சாம்பலால் இடப்படுகின்றது. மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்தும் ஓர் அடையாளமாகவும், அதே நேரம், நம்மில் தவம், தாழ்ச்சி உருவாக வேண்டிய ஓர் அழைப்பை திருநீற்றுபுதனும், அன்று நம்மீது பூசப்படும் சாம்பலும் நமக்குத் தருகின்றன.
தவக்காலம் எத்தனை நாட்கள் கொண்டது?

கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை நோக்கிய இத்தவக்காலப் பயணம் நாற்பது நாட்களை கொண்டது. ஆண்டவரின் நாள் என அழைக்கப்படும் ஞாயிற்றுக் கிழமைகளை தவிர்த்து தவக்கலம் நாற்பது நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்நாட்களில் பாவத்திற்காக மனம் வருந்தல், மனமாற்றம் மற்றும் புதுப்பித்தலின் திருப்பயணமாகச் செலவிடப்பட வேண்டும் என நாம் அழைப்புப் பெறுகின்றோம்.

விவிலியத்தில் நாற்பது என்ற எண், பல்வேறு சிறப்பு அடையாளங்களைக் கொண்டுள்ள ஒன்றாகும். இஸ்ரயேலரின் 40 ஆண்டுப் பாலைவனப் பயணத்தை இது நினைவுபடுத்தி நிற்கின்றது. அப்பாலைவனப் பயணக்காலம், எதிர்பார்ப்பின், சுத்திகரிப்பின் மற்றும் இறைவனுடன் நெருக்கமாக இருந்த காலமாகும் அதுமட்டுமல்ல, சோதனையின் மற்றும் துன்பங்களின் காலமாகவும் இருந்தது. தன் பொதுவாழ்வைத் துவக்குவதற்கு முன்னால் இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்களைச் செலவிட்டத்தையும் இத்தவக்காலம் நினைவுறுத்தி நிற்கின்றது. இந்த நாற்பது நாட்களும் இயேசு செபத்தில் இறைதந்தையுடன் ஆழமான நெருக்கத்தில் இருந்தார். அது மட்டுமல்ல, தீமை எனும் மறைபொருளையும் அவர் எதிர்கொண்டார்.

தவக்காலம் ஒன்றிப்பின் காலம்

தவக்காலத் தன்னொறுப்பு என்பது இயேசுவின் பாஸ்கா மறையுண்மையில் அவரைப் பின்பற்றுவதற்கும், நம் விசுவாச வாழ்வை ஆழப்படுத்துவதற்கும் உதவுவதை நோக்கம் கொண்டதாகும். இந்த நாற்பது நாட்களும் நாம், நமதாண்டவரின் வார்த்தைகளையும் எடுத்துக்காட்டுக்களையும் ஆழமாகத் தியானிப்பதன் மூலம் அவரிடம் மிக நெருக்கமாக வந்து, நம் ஆன்மீக வறட்சி, சுயநலம் மற்றும் உலகாயுதப்போக்குகளை வெற்றிகொள்ளவேண்டும் என நமக்கு காட்டுகின்றது. சிலுவையில் அறையுண்டு பின்னர் உயிர்த்தெழுந்த நமதாண்டவருடன் கொள்ளும் ஒன்றிப்பில், பாலைவன அனுபவத்தின் வழியாக உயிர்ப்பின் மகிழ்வு மற்றும் நம்பிக்கையை நோக்கி இறைவன் நம்மை வழிநடத்திச் செல்லும் இத்தவக்காலத்தில் நாம் அவருடன் ஒன்றிப்பை வளப்போம். ஒப்புரவாவது மிக அவசியமானதும் கூட. படைத்தவரோடு மட்டுமல்ல, நம்மோடு வாழ்வோரோடும் நாம் ஒப்புரவாவது காலத்தின் கட்டாயதேவையாகின்றது.

தவக்காலம் தீமையை நன்மையால் வெல்லும் காலம்

நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” என்று திருநீற்றுப் புதனன்று கத்தோலிக்கத் திருவழிபாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை மையப்படுத்தி சிந்தித்தால் இந்த விவிலிய வார்த்தைகள் நம்மில் நம்பிக்கையற்ற ஒரு நிலையை உருவாக்குவதற்குப் பதில், நமது நிலையற்றத் தன்மையையும், அதனை மாற்றவல்ல இறைவனின் அருகாமையையும் நமக்குணர்த்துவதை நாம் காணமுடியும். மண் என்ற அடையாளம் அழிவைக் குறிப்பதாகத் தெரிந்தாலும், நம்மில் ஒருவராய்ப் பிறந்து, இறந்து புதைக்கப்பட்டு, மீண்டும் உயிர்த்த கிறிஸ்துவின் வழியாக, இந்த மண்ணும் உயிர் தரும் சக்தி பெறுகின்றது. இந்த மண்ணில் தற்போதைய கலாசாரம், நன்மை தீமை குறித்த உணர்வை இழந்திருந்தாலும், தீமையை நன்மையால் வெல்ல முடியும் என்பதை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தம் முழு சக்தியுடன் உலகிற்கு வலியுறுத்த வேண்டும்

உறவை புதுப்பிக்க வருவதே இத்தவக்காலம்.

இறை மானிட உறவை புதுப்பிக்க வருவதே இத்தவக்காலம். இவ்வுறவை புதுப்பித்து கொள்ள மனிதனுக்கும் இறைவனுக்குமிடையே உரையாடல் செய்ய நம்மை அழைக்கின்றது இத் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மோடு உறவாடிய இறைவன்- இத்தவக்காலத்தில் தன் பாடுகளின் வழியாக நம்மோடு அவர் கொண்டுள்ள அன்பை-உறவை உறுதிபடுத்த நமக்கு அழைப்பு விடுக்கின்ற காலமே இந்த தவக்காலம். இறைவாக்கினர்கள் வழியாக பேசிய இறைவன் நீதிதலைவர்-அரசர்கள் வழியாக செயற்பட்டு தொடர்ந்தும் மானிட இனத்தின் இடறிய பாதையைச் சமன் செய்து அன்புறவை கட்டியெழுப்ப இறுதியாக அன்னைமரி வழியாக தன் அன்பு மகனை மானிடர்பால் தந்தார். தவக்காலம் நமக்கு உறவை வளர்க்க நமக்கு தரப்படும் உறவின் அற்புதமான காலமாகும்.; நல்ல ஆரோக்கியமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதில் அக்கறை கொள்வோம். நம்முடைய நல்ல மாதிரிகையின் வழி புதிய சமூகத்தை கட்டியெழுப்புவோம். உறவிலே இறைவனை உயிர்ப்பிக்கச் செய்து, தெய்வ தரிசனம் பெறுவோம்.

தவக்காலம் – உறவின் காலம்.

உறவின் உயிர்ப்பின் தளிர் நம்மிலே புதிய சகாப்தத்தை தர இத்தவக்காலத்தை பயன்படுத்துவோம். குறைகளை களைந்து, நிறைகளை காண அழைக்கும் காலமே தவக்காலம் இறைவனின் அளவுகடந்த அன்பால் இயேசு 30ம் வயதிலிருந்து மூன்றாண்டு போதனைகளை மேற்கொண்டார். ஓய்வு உறக்கமின்றி காடுமேடுகளை கடந்தார். மூன்றாண்டு போதனைகள் முக்காலமும் உணர்ந்திடும் வண்ணம் இயேசவின் பாடுகள் நமக்கு உணர்த்துகின்றது. அவர் ஏற்ற துன்ப துயரங்கள், போராட்டங்கள், சவால்கள், அனைத்தும் நாம் நம்வாழ்க்கையை புரட்டி பார்த்து குறைகளை களைந்து, நிறைகளை காண மனமாற்றம் பெற அழைக்கும் காலம் தான் தவக்காலம். தவக்காலம் மனமாற்றத்தின் காலம் என்பதனை உணர்ந்திடுவோம். மன்னிப்பை இதயத்தில் நிறுத்தி நல்ல பண்பாட்டினை கரத்தில் ஏந்தி சமூகத்தில் வீறு நடைபயிலும்போது இறை ஆசிரும். இறை அன்னையின் வழி நடத்தலும் நமக்கு துணை இருந்திடும்.

பகிரவும்...