Main Menu

போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும்: ஜேர்மனி வலியுறுத்தல்!

ஈரானில் அரசிற்கெதிரான போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த, ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும் என ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது.

உக்ரேனிய விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் வீழ்த்தியதையடுத்து, ஆத்திரம் கொண்டுள்ள ஈரான் மக்கள் அரசிற்கெதிராக டெஹ்ரான், ஷிராஸ், எஸ்ஃபஹான், உருமியே போன்ற நகரங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை கட்டுப்படுத்த அந்நாட்டு படையினர் திக்குமுக்காடி வருகின்றனர்.

இதற்கிடையில், இப்போராட்டத்தில் பொதுமக்கள் மீது அந்நாட்டு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், தங்கள் போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும் என ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் மரியா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தங்கள் போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும். ஈரான் மக்களுக்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்த எல்லா உரிமையும் உண்டு.

ஈரான் மக்கள் நடத்தும் போராட்டம் சுதந்திரமானதாகவும், அமைதியாகவும் நடக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்’ என கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களை அரசு கொல்லக்கூடாது என வேண்டுக்கோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...