Main Menu

9 மாதத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகி 486 பேர் உயிரிழப்பு : 3393 பேர் பாதிப்பு

இவ் வருடத்தின் கடந்த ஒன்பது  மாத காலப்பகுதியில்  எச்.ஐ.வி  தொற்றுக்குள்ளாகி 486 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சின் தேசிய பாலியல்சார் நோய்கள் மற்றும் எயிட்ஸ்  கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகர் வைத்தியர் சந்திரிக்கா  ஜெயக்கொடி, எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான நோயாளிகள்  இவ் வருடத்தில் மாத்திரம் சுமார் 3,393 பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் செய்தி  சேகரிக்கும்  போது  ஊடகவியலாளர்கள்  கவனத்தில்  கொள்ள  வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில்   சுகாதார மேம்பாட்டுப்பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  விசேட  கருத்தரங்கு  இன்று இலங்கை  மன்றக்கல்லூரியில்  இடம்  பெற்றது.  

எச்.ஐ.வி வைரஸ்   பாலியல்  உறவின்  காரணமாக  ஏற்படக்கூடிய  நோய்  ஆகும். இந்த வைரஸ்தாக்கத்தினால்  எயிட்ஸ் நோய் நிலைமை  ஏற்படுகின்றது.   அந்த வகையில்  இந்த  நோய்த்தொற்றானது   பாதுகாப்பு  அற்ற   பாலியல்  தொடர்பினை  பேணுதல்  , நோய்த்தொற்றுக்குள்ளான  குருதிப்பரிமாற்றம் மற்றும்  தாயிலிருந்து  பிள்ளைக்குமே  பரவுகின்றது.  இவை  தவிர  வேறு  எந்த வகையிலும்  எச்.ஐ.வி  வைரஸ் ஏனையவர்களுக்கு  தொற்றக்கூடிய  வாய்ப்புக்கள்  இல்லை.  நோய் நிலைமை  தொடர்பில்  முறையான  தெளிவின்மையின்  காணரமாகவே  ,  பொதுமக்கள்  பெருமளவில்   அச்சமடையும்  நிலைமை  ஏற்பட்டுள்ளது. ஆகவே  பொதுமக்கள்  இது தொடர்பில்  தகுந்த     தெளிவு  படுத்தலை  பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.  

பாலியல்  தொழில்  புரிவோர்  , ஒரினச்சேர்கையாளர்கள்  ,     போதைப்பொருள்  பாவனையில்  அதிகளவில்  ஈடுபடுவோர்  ,  கைதிகள்  மற்றும்    சுற்றுலா கடற்கரை  இளையோர் ஆகியோருக்கே   இந்த  நோய்  அதிகளவில்  ஏற்படுவதற்கான  வாய்ப்புக்கள்  உள்ளன.  

இலங்கையில்  பாலியல்  நடத்தையின்  காரணமாக  ஏற்படும்  நோய்களை  எடுத்துக்கொண்டால்    எயிட்ஸ்  நோய்   மாத்திரமல்லாது  சிபிலிஸ்  , கொனோரியாவால்  உள்ளிட்ட பல்வேறு  நோய்கள் காணப்படுகின்றமை    கண்டறியப்பட்டுள்ளது.  வயது  வந்தவர்களுக்கு   மாத்திரமல்லாது  சிறுவர்களுக்கும்    பாலியல்சார்   நோய்கள் அதிகளவில்  ஏற்படுகின்றன.    .  

உலகளாவிய  ரீதியிலான ஆய்வின்  பிரகாரம் கடந்த  2017  இல்  மாத்திரம்    36.9  மில்லியன்  பேர் வரையில்    எச்.ஐ.வி  வைரஸ்  தொற்றுக்குள்ளானவர்களாக  அடையாளம்  காணப்பட்டுள்ளனர்.  அவர்களில்    1.8  மில்லியன்  பேர் வரையில்   அவ்வருடத்தில்  புதிதாக  எச்.ஐ.வி  தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.    அதேவேளை  , 0.9  மில்லியன்     பேர்  பாலியல்சார்  நோய்   தாக்கங்களின்  காரணமாக   உயிரிழந்துள்ளனர்.  

தேசிய  பாலியல்சார்  நோய்கள் மற்றும்  எயிட்ஸ்  நோய்கட்டுப்பாட்டு  திட்டத்திற்கான  பிரிவு    1985  ஆம்  ஆண்டில்  இலங்கையில்  நிறுவப்பட்டது. இந்நிலையில்  முதன்  முதலில்  1987  ஆம் ஆண்டில்  எச்.ஐ.வி  நோயாளியொருவர்  அடையாளம்  காணப்பட்டிருந்தார்.  ஆரம்பத்தில்   இந்நோய்  தொடர்பில் சிகிச்சை  அளிப்பதற்கான  வசதிகள்  காணப்படவில்லை.   ஆயினும்  2004  ஆம்  ஆண்டாகும்  போது  எயிட்ஸ்  நோய்க்கு  உரிய   சிகிச்சை  முறைகள்  நாட்டில்  அறிமுகப்படுத்தப்பட்டது.  

இந்த  வகையில்   பாலியல் சார்  நோய்நிலைமைகள்  மற்றும்  எயிட்ஸ் நோய்த்தாக்கம்   ஆகியவற்றை  கட்டுப்படுத்தும்  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன.     

எதிர்வரும்  2035  ஆம்  ஆண்டாகும்  போது  90 வீத்தினால் இந்த நோய்தாக்கத்தை   கட்டுப்படுத்துவதனை  நோக்காக  கொண்டே  இந்த  நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன.  அந்த வகையில் நாடளாவிய எயிட்ஸ்  நோய்  தொடர்பில்  ஆலோசனைகளை  பெற்றுக்கொள்ளக்கூடிய   மத்திய  நிலையங்கள்  காணப்படுகின்றன.    இந்த  நிலையங்களினூடாக  பல்வேறு  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...