Main Menu

மாவீரர் வரலாறு – லெப். புயல்வீரன்

மாவீரர் வரலாறு

 சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின்  ஆதரவாளரும் அரசியறதுறை தாக்குதலணி யின் இளம் அணித் தலைவருமான லெப். புயல்வீரன் அவர்களை பற்றி அறிந்து கொள்வோம்.
லெப். புயல்வீரன்
(சிதம்பரப்பிள்ளை காண்டிபன் )
கண்டாவளை , கிளிநொச்சி மாவட்டம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்கள் திரள் அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் முதன்மையானதாக விளங்குகிறது. ” எமது போராட்டத்தின் பளுவை எமது மக்களே சுமக்கிறார்கள். சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையின் நெருப்பில் குளிப்பது எமது மக்களே ” என்பார் தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள். அடக்குமுறையின் ஒரு வடிவமாகவே தமிழர் பகுதிகளில் கடுமையான பொருளாதாரத் தடைகளை சிங்கள அரசு விதித்து தமிழ் மக்களை பணிய வைக்க முயன்றது.  இவ்வாறான நெருக்கடியான சூழலில் பல்லாயிரம் தமிழ்ச் சான்றோர்களும் மாணவர்களும் இளைஞர்களும் வணிகப் பெருமக்களும் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்து அரும்பெரும் செயல்களைச் செய்தார்கள் என்பது வரலாறு.  குடும்பம்,  கல்வி,  ஊர்ப் பொது வேலைகள் ஆகிய இன்றியமையாக் கடமைகளுக்கு நடுவில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப அருந்தொண்டாற்றிய ஆன்றோர்கள் தமிழீழ மண்ணில் நிறைந்திருக்கின்றார்கள்.  அவ்வாறானதொரு சிறந்த ஆதரவாளராக கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை காண்டிபன் என்ற இளம் மாணவன் விளங்கினார்.
இளம் வயதிலேயே தாயாரை இழந்த காண்டிபன்  தந்தையார் சிதம்பரப்பிள்ளை, தமக்கையார்கள் சுமதி, கோமதி ,  வளர்மதி,  தங்கை தேவமதி ஆகியோரின் சீரிய வளர்ப்பில் வளர்ந்தான். கண்டாவளை மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற காண்டிபன் கல்வியிலும் விளையாட்டிலும் பாடசாலை நிகழ்வுகளிலும் சிறந்து விளங்கினான் . ஆசிரியப் பெருமக்களும் பொது மக்களும் இவனுடைய ஆளுமைகளை மெருகேற்றி சிறந்த மாணவர் தலைவனாக வளர்த்தெடுத்தனர்.  காண்டிபன் ஈடுபடும் எந்தவொரு வேலையிலும் அவனுடைய தனித்துவமான ஆளுமை வெளிப்பட்டிருக்கும் . பாடசாலை செயற்பாடுகள், விடுதலைப் போராட்ட ஆதரவு செயற்பாடுகள்,  ஊர்ப் பொது வேலைகள் ஆகிய அனைத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்கும் காண்டிபன் மாணவ மாணவிகளுக்கு முன்னுதாரணமான மாணவர் தலைவனாக வளர்ந்தான். இளம் காண்டிபனை வீறு கொண்டெழுந்த விடுதலைப் போராட்டமும் தன் பக்கம் இழுத்தது.  கண்டாவளை யிலிருந்து சில மைல்கள் தூரத்தில் முன்னரண் வரிசை அமைத்து களத்தில் நின்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி போராளிகளுடன் ஏற்பட்ட நட்பு காண்டிபனுக்கு புதிய அனுபவங்களையும் வாய்ப்புகளையும் திறந்து விட படையணியின் முழு நேர ஆதரவாளராக செயற்பட்டான்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் புகழ்பூத்த அணித் தலைவர்களாக விளங்கிய இராசநாயகம், வீரமணி,  பருதி , பாவலன்,  நியூட்டன், கோபித் ,பிருந்தாவன், சோழநேயன் மற்றும் வைத்தி,  மிரேஸ் முதலானோருடன் நெருக்கமான தொடர்பை பேணிய காண்டிபன்,  ஊரியான் பரந்தன் முன்னரங்கில் காப்பரண்கள்,  நகர்வகழிகள் அமைக்கும் பணிகளில் பேருதவியாக செயற்பட்டார்.  கண்டாவளை யிலிருந்து இளைஞர்களையும் தந்தைமார்களையும் அணியணியாக களமுனைக்கு அழைத்து வந்து நகர்வகழிகளை வெட்டுவித்தார்.  ஆயிரக்கணக்கான பனை ஓலைகளை வெட்டுவித்து மாட்டு வண்டிகளில் ஓலைகளை ஏற்றிக் கொண்டு வந்து முன்னரங்கில் சேர்த்து மறைப்பு வேலிகள் அமைக்க உறுதுணையாக இருந்தார்.  முன்னரங்க போராளிகளுக்காக கண்டாவளை மக்களிடையே பெரும் ஆதரவை திரட்டி ஏராளமான உலர் உணவுகளை சேகரித்து போராளிகளுக்கு ஈந்து அவர்களின் பேரன்பையும் நன்மதிப்பையும் பெற்றார்.  படையணியின் சிறப்புத் தளபதி ராகவன், துணைத் தளபதி ராஜசிங்கம் ஆகியோரின் அன்பையும் பாராட்டையும் பெற்ற ஆதரவாளராக காண்டிபன் வளர்ந்தார்.  இவருடைய போர்க்கள செயற்பாடுகளுக்கு கண்டாவளை பாடசாலை சமூகமும் பொது மக்களும் பேராதரவு தந்து பெரிதும் ஊக்கப்படுத்தினர் .
ஓயாத அலைகள் – 3 தொடர் நடவடிக்கையில் பரந்தன் மீட்புச் சமரின் போது காண்டிபன் பின்தளத்தில் நின்று போராளிகளுக்கு உணவு குடிநீர் வழங்கும் பணிகளிலும் , காயமடைந்தவர்கள் மற்றும் வீரச்சாவடைந்தவர்களை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டார்.  படையணியின் பண்ணை வயலைப் பராமரித்தார்.  இத்தாவில் தரையிறக்க சமரின் போது கொம்படியில் நின்றிருந்து காயமடைந்த போராளிகளை மருத்துவமனைகளுக்கு அனுப்புவதில் செயற்பட்டார்.  ஆனையிறவு மீட்புக்கு பிறகு,  படையணிக்கு திருவையாறு மற்றும் கிளிநொச்சியில் புதிய தளங்கள் அமைப்பதில் உதவியாக செயற்பட்டார்.
காண்டிபனுடைய தந்தையார் சிதம்பரப்பிள்ளை அவர்கள் இவருடைய செயற்பாடுகள் அனைத்திலும் உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தி வழிநடத்தினார். கடின உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் முன்னுதாரணமான தந்தையார் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 2002 ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்த போது,  இளம் காண்டிபனின் தோள்களில் குடும்பப் பொறுப்பும் சேர்ந்து கொண்டது  .  தமக்கைகள்,  தங்கையின் வழிகாட்டலிலும் அன்பிலும் குடும்ப பொறுப்பை செவ்வனே நிர்வகித்தான்.  எந்த சிக்கலான பிரச்சினைகளையும் வெகு இயல்பாக எதிர்கொண்டு திறமுடன் செயல்படும் மனவலிமை காண்டிபனுக்கே உரியதாக இருந்தது.  ” எமது போராளிகளின் பலம் அவர்களுடைய மன உறுதியிலிருந்தே பிறக்கிறது ” என்ற எமது தேசியத் தலைவரின் வாய்மொழிக்கு ஏற்ப காண்டிபன் அசாத்தியமான மனவலிமையோடும் போராட்டத்தின் மீது மாறாத பற்றோடும் இயக்கத்தின் ஆதரவாளராக தொடர்ந்து செயற்பட்டார்.
போர் நிறுத்த காலத்தில் படையணியின் நிர்வாக தளத்தில் கடமையாற்றிய மூத்த அணித் தலைவர்கள் குமுதன், முல்லை,  தமிழரசன், வைத்தி, மிரேஸ், சீர்முரசு , மற்றும் பிரபு முதலானோருடன் நெருங்கிய தொடர்பை பேணிய காண்டிபன் பல்வேறு கடமைகளில் உறுதுணையாக செயற்பட்டார்.  வைத்தி மற்றும் மிரேசின் உடன்பிறவா சகோதரனாக இருந்து பெரும் உதவிகளை செய்தார்.
2007 ம் ஆண்டு சிறிலங்கா அரசு வன்னியில் பெரும் யுத்தத்தை கட்டவிழ்த்து விட்ட போது,  காண்டிபன் ஒரு போராளியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.  தமிழீழ சுகாதார சேவையில் கடமையாற்றிய காண்டிபன்,  முட்கொம்பன் பயிற்சிக் கல்லூரியில் அடிப்படை பயிற்சியை முடித்துக் கொண்டு புயல்வீரன் என்ற போராளியாக அரசியறதுறை தாக்குதலணியில் இணைக்கப்பட்டார்.  இவருடைய முன்னைய கள அனுபவங்களால் உடனடியாகவே செக்சன் லீடராக நியமிக்கப்பட்டார்.  அரசியறதுறை தாக்குதலணி சிறப்பு தளபதி ஈழப்பிரியன்,  தளபதி கீதன் மாஸ்டர் ஆகியோரின் நம்பிக்கைக்குரிய இளம் அணித் தலைவராக புயல்வீரன் பூநகரி முன்னரங்கில் பாதுகாப்புக் கடமைகளிலும் பயிற்சிகளிலும் ஈடுபட்டார்.
2008 ம் ஆண்டு அரசியறதுறை தாக்குதலணி மன்னார் மடுப் பகுதியில் எதிரியின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கான அரும்பணியில் களமிறக்கப்பட்டது.  இவ்வணியில் புயல்வீரன் செக்சன் லீடராக அல்லும் பகலும் அயராது களமாடினார்.  தனது பகுதிகளை பாதுகாப்பதில் தீரமுடன் செயற்பட்ட புயல்வீரன்,  04 – 02 – 2008 அன்று எதிரியின் செறிவான எறிகணைத் தாக்குதலில் படுகாயமுற்று அங்கே வீரச்சாவைத தழுவிக் கொண்டார
லெப். புயல்வீரன் மாணவப் பருவத்திலிருந்தே எமது தேசியத் தலைவர் மீதும் எமது மக்கள் மீதும் ஆழ்ந்த பற்று கொண்டு சிறந்த சேவையாற்றினார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் புகழ்பூத்த தளபதிகளான ராகவன், ராஜசிங்கம், வீரமணி, கோபித், அமுதாப் முதலானோரின் அன்பையும் பாராட்டையும் பெற்ற ஆதரவாளராக புயல்வீரன் விளங்கினார்.  தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த புயல்வீரன் ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் முன்னுதாரணமான போராளியாக திகழ்ந்தார்.  மாறாத புன்னகையுடன் குடும்பப் பொறுப்பையும் விடுதலைப் போராட்ட பங்களிப்பையும் சமகாலத்தில் திறமுடன் மேற்கொண்டு செயற்பட்ட லெப். புயல்வீரன் அவர்களின் வீரநினைவுகள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
பெ.தமிழின்பன்
பகிரவும்...
0Shares