Main Menu

6 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களை 1ஆம் வகுப்பு சேர்க்கக் கூடாது – மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையின் படி பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் வயது வரம்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 6 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால், பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

குழந்தை பிறந்த உடனே ஓராண்டுகள் பராமரிக்கும் பெற்றோர்கள் மழலையர் பள்ளி.. ப்ரீ கேஜி.. எல்கேஜி என சேர்த்து விட்டு விட்டு பணிக்கு சென்று விடுகின்றனர். 5 வயதான உடன் 1ஆம் வகுப்புக்கு பள்ளிகளில் சேர்ப்பது வழக்கமாக உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் கையை தலைமேல் கொண்டு வந்து காதை தொட சொல்வார்கள். அப்படி தொட்டு விட்டால் பள்ளியில் சேர்க்கும் வயது வந்து விட்டது என்று சொல்லி பள்ளிகளில் சேர்த்துக்கொள்வார்கள். இப்போது மாணவர் சேர்க்கைக்கு இப்போது பிறப்பு சான்றிதழ் அவசியம். இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பு குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விகொள்கை அமல்படுத்தப்பட்டது. இதன் படி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை திமுக எதிர்த்துவருகிறது.

புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் மும்மொழிக்கொள்கை போன்ற அம்சங்களை திமுக கடுமையாக எதிர்க்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது மட்டுமல்லாமல், ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ச்சியாக புதிய தேசிய கல்விக் கொள்கையை திமுக எதிர்த்துவருகிறது. எனினும் புதிய கல்விக்கொள்கையில் உள்ள பல அம்சங்களை படிப்படியாக மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த கல்விக்கொள்கையின் படி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க 6 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் அனுப்பி இருக்கிறது. மேலும் இந்த உத்தரவை மீறி 6 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால், பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகிரவும்...