Main Menu

5 ஆண்டுகள் பொன் ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்? – ஜெயக்குமார்

5 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தபோது பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கு என்ன செய்தார் என அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரம் என நான் கூறிவருவதாக பா.ஜ.க.வின் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார் “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்து தொடர்ச்சியாக அரசை குற்றம் சொல்வதே பொன் ராதாகிருஷ்ணனுக்கு வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் இருக்கிறது.

எனவே அவரது கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. அவரது கருத்தை பா.ஜ.க.வின் கருத்தாக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

போக்குவரத்து துறையில் இந்தியாவிலேயே குறைந்த எண்ணிக்கையில் விபத்துகள் நடைபெற்ற மாநிலம் என்ற அடிப்படையில் மத்திய அரசு தமிழக அரசுக்கு விருது வழங்கியுள்ளது.

பயங்கரவாத செயல் ஒடுக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டது. பொதுமக்கள் சிறப்பாக, பாதுகாப்பாக வாழக்கூடிய மாநிலம், மகளிருக்கு முழுமையான பாதுகாப்பு, சாதி-மத மோதல்கள் இல்லை. சட்டம்- ஒழுங்கை சிறப்பாக பேணிக் காக்கின்ற மாநிலம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிக்கு அங்கீகாரம் கொடுத்தது யார்? மத்திய அரசு.

அவர்கள் ஒரு அளவுகோல் வைத்துள்ளனர். அதன்படி, அதிக மதிப்பெண் பெற்றது தமிழகம்தான். அதனால் மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. மத்திய அரசு சார்ந்த கட்சியில் தானே பொன் ராதாகிருஷ்ணன் இருக்கிறார். அப்படியானால், இவரது குற்றச்சாட்டு மத்திய அரசை எதிர்த்தா? என்று அவரை நான் கேட்கிறேன்.

பொன் ராதாகிருஷ்ணன் 5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தார். எவ்வளவோ திட்டங்களை கொண்டுவந்து இருக்கலாம். ஆனால் ஒரு திட்டம் கூட இவரால் இங்கே கொண்டுவர முடியவில்லை. அவர் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்” என கூறினார்.

பகிரவும்...