30ம் ஆண்டு நினைவு வணக்கம் – லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்)
நினைவுப் பகிர்வு
லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்)
இயற் பெயர் : சிலுவைராஜா. எட்மன் பேட்டன்
தாயின் மடியில் 06.10.1965
தாயக விடிவில்: 22.04.1987
லெப். கிருமானி அவர்களின் மீளா நினைவலைகள்
கிருமானி என்றாலே அவருடைய சிரித்த முகமும் சிங்காரத் தோற்றமும் அன்பான பார்வையும், கலகலப்பான பேச்சும் தான் அவரைத் தெரிந்த எல்லோருக்கும் நினைவு வரும், அவர் இருக்கும் இடத்திலே சிரிப்புக்கும் கும்மாளத்திற்கும் பஞ்சமே இருக்காது. ஒரு முறை அவரிடம் பழகிய எவருமே அவரை விட்டு விலக மறுப்பார்கள். தன்னுடைய சக போராளி நண்பர்களுடன் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். தன்னை நாடி வருபவர்களை அன்பாக உபசரித்து வயிராற உணவளிப்பதிலே இன்பங்கொள்பவர். கல்வி, கலை, விளையாட்டுக்களில் திறமையானவர். வீரத்தோடு, விவேகமும், ஆளுமையும் கொண்டவர். தேசியத்தலைவர், பொன்னம்மான், கிட்டு, ராதா போன்ற தளபதிகளின் அன்பிற்கும் பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் உரிய போராளி.
இவர் தனது இருபதாவது வயதில் விடுதலை வேட்கை கொண்டு இந்தியா புறப்பட்டுச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் 9வது பயிற்சிப் பாசறையைத் தொடங்கினார். இவர் கிறிக்கெற் ஆட்டத்தில் திறமையானவராக இருந்ததால் தலைவர் அவர்களால் ‘கிருமானி’ எனும் நாமம் சூட்டப்பட்டார். பயிற்சிக் காலத்தில் இவரது திறமையும் ஆளுமையும் கண்டு வியந்த தேசியத் தலைவர் இவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் ஆசிரியராக நியமித்தார்.
1986ஆம் ஆண்டு நாடு திரும்பிய இவர் முல்லைத் தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களில் இடம்பெற்ற இராணுவத்தினருடனான நேரடி மோதல்களில் பங்கேற்று தேசியத் தலைவரினதும் மூத்த தளபதிகளினதும் பாராட்டைப் பெற்றார். பின் யாழ்.கோட்டை சாந்தி தியேட்டர் காவலரண் பொறுப்பாளராய் கடமையேற்று இரவு பகல் பாராது கண் விழித்து தன் கடமையை செவ்வனே செய்தார். ‘எனது காவலரணைத் தாண்டி கோட்டை இராணுவம் வெளியேறுமாயின் என் இறந்த உடல் தாண்டித் தான் இராணுவம் முன்னேற முடியும்’ என்று தளபதி கிட்டுவிடம் வீர சபதமும் இட்டார். இந்தக் காலப்பகுயில் தளபதி கிட்டுத் தலைமையில் நடைபெற்ற யாழ் தொலைத் தொடர்பு நிலையத் தாக்குதலில் வெற்றிக் கனியைப் பறித்ததில் இவரின் பணியும் அளப்பரியது.
22.04.2017 அன்று நடைபெற்ற காங்கேசன்துறை, காபர்வியூ மினிமுகாம் தகர்ப்பிலும் வெற்றியுடன் திரும்புவார் என்று நாம் எண்ணியிருக்கையில் வெற்றிச் செய்தி மட்டும் கிடைத்தது. அவர் திரும்பி வரவேயில்லை. அவரது வீரச்சாவு அனைவரது தலையிலும் இடியாய் இறங்க கண்கள் குளமாக வேதனைத் தீயிலே வெந்து சாம்பலானோம்.
எம் தேசத்தில் சுதந்திரக் காற்று வீச வீரத்துடன் எதிரியின் பாசறை தகர்த்து, தாயக மண்ணிலே விதையாக ஆழப் புதைந்து வேரிட்டு விழுது பரப்பி எம்மவர் உள்ளங்களில் என்றும் வாசம் செய்யும் போர்ப் புலி வீரனே! மாவீரனே! கிருமானியே! எத்துணை இடர் வரினும் தடை வரினும் கொண்ட கொள்கையில் நெறி தவறாது தாயகக் கனவை என்றும் நாம் சுமந்து நிற்போம். இது உங்கள் மீதும் அனைத்து மாவீரர் மீதும் நாம் எடுக்கும் வீர சபதம்