Main Menu

16ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – நாகை மீனவர்கள் திதி கொடுத்து அஞ்சலி!

சுனாமியில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாகை மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் இன்று 16 ஆண்டு சுனாமி நினைவு தின கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையில் நாகை மாவட்டத்தில் 6,060 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி சுனாமி நினைவு தின அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாகை மாவட்டம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, நாகை ஆரிய நாட்டு தெரு, செருதூர், நாகூர், நம்பியார்நகரில் சுனாமியின் உயிர் நீத்தவர்களின் படங்களுக்கு அவர்களது உறவினர்கள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதைப்போல் கீச்சாங்குப்பம் கிராமத்தில் சுனாமியில் உயிர்நீத்தவர்களுக்கு, உறவினர்கள் திதி கொடுத்து அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பேட்டை மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் மெளன ஊர்வலம் சென்று சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் நாகை அக்கரைப்பேட்டையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

16ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருவதால் நாகை மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அதுபோன்ற நிகழ்வுகள் எப்போதும் ஏற்படக்கூடாது என பொதுமக்கள் கனத்த இதயத்துடன் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...