Main Menu

ஹொங் கொங்கில் பாரிய போராட்டம் – அரச நிறுவனங்கள் முடக்கம்

ஹொங் கொங்கில் அரச நிறுவனங்களை முற்றுகையிட்டு பாரியளவிலான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹொங் கொங்கில் முக்கிய வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங் கொங் நிர்வாகம் தீர்மானித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங் கொங்கில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் குறித்த சட்டமூலத்தை கைவிடுவதாக ஹொங் கொங் நிர்வாகத்தலைவர் கேரி லாம் அறிவித்தார்.

சர்ச்சைக்குரிய குறித்த சட்டமூலத்தை முற்றாகக் கைவிடவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். அத்துடன், குறித்த கோரிக்கையை நிறைவேற்ற நேற்று மாலை 5 மணிவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் காலவகாசமும் வழங்கியிருந்தனர்.

எனினும், கோரிக்கையை அரசாங்கம் கண்டுகொள்ளாததால், இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் போராட்டக்காரர்கள் அரசாங்கக் கட்டட வளாகத்தில் மீண்டும் கூடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்றக் கட்டடத்துக்கு வெளியே கூடாரம் அமைத்துத் தங்க வருமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். வீதிகளை மறித்து, பொதுப் போக்குவரத்தை முடக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சர்ச்சைக்குரிய சட்டமூலம் முழுமையாக கைவிடப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பகிரவும்...