Main Menu

வைகோவுடன் சந்திப்பு; ஈழத்தமிழர் பிரச்னைகளை பரிமாறிக் கொண்டோம் – ஜீவன் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர், இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்டமைப்புத் துறை அமைச்சர் ஜீவன் தொண்டைமான், நேற்று (30.08.2021), சென்னை அண்ணா நகரில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தார். தனது தந்தையார் ஆறுமுகம் தொண்டைமான் அவர்களுடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தமைக்காக வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தங்களைப் பற்றி, என் தந்தையார் நிறைய செய்திகளை எனக்குச் சொல்லி இருக்கின்றார் என்றார்.

உங்கள் தாத்தா, பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்களுடன் எனக்கு நீண்ட காலப் பழக்கம் உண்டு. எண்பதுகளில் தொடங்கி, பலமுறை சந்தித்து இருக்கின்றேன்; பல நிகழ்வுகளில் அவருடன் ஒன்றாகப் பங்கேற்று இருக்கின்றேன். தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்கப் பணி ஆற்றினார். அவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் முழங்கினார். அதேபோல, உங்கள் தந்தையார் ஆறுமுகம் தொண்டைமான் அவர்கள், சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்திப்பது வழக்கம். எதிர்பாராத வகையில், குறைந்த வயதில் அவர் திடீரென இயற்கை எய்தியது அதிர்ச்சியாக இருந்தது. 26 வயதிலேயே நீங்கள் அமைச்சர் பொறுப்பு ஏற்று இருக்கின்றீர்கள். என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும், உங்களுக்கு நிறையக் கடமைகள் இருக்கின்றன என்று, வைகோ குறிப்பிட்டார்.

ஆமாம் ஐயா, தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக, நுவரேலியாவில் ஒரு கல்லூரி அமைக்க வேண்டும். தமிழக அரசின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். அதற்காக முதல்வரையும் சந்திக்க இருக்கின்றோம் என அமைச்சர் தெரிவித்தார். நீங்கள் இலங்கைக்கு வந்து தோட்டத் தொழிலாளர்களைச் சந்திக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக, தமிழ்நாடு அரசு ரூ 300 கோடி ஒதுக்கி இருப்பதை வைகோ குறிப்பிட்டார். தொடர்ந்து, ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து, இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

பகிரவும்...