Main Menu

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகும் ஸ்பெயின்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மிகப்பெரிய அழிவினை சந்தித்துள்ள ஸ்பெயின், சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்தும் ஒரு கட்டமாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கின்றது.

இதற்கமைய, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் ஸ்பெயினில் விடுமுறைகளுக்கான முன்பதிவினை மேற்கொள்ளலாம் என சுற்றுலா அமைச்சர் ரெய்ஸ் மரோட்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜூலை மாதத்தில் ஸ்பெயினுக்கு வர கோடை விடுமுறையைத் திட்டமிடுவது பொருத்தமானது எனவும் அவர் மேலும் கூறினார்.

ஸ்பெயின் அரசாங்கம் விதித்திருக்கும், வெளிநாட்டு பயணிகளுக்கான இரண்டு வார சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கை அதற்குள் நிறுத்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் உலகின் இரண்டாவது நாடான ஸ்பெயினில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்தில் அனைத்து சுற்றுலா துறைகளும் முடக்கப்பட்டன.

கடந்த மார்ச் 14ஆம் திகதி முதல் உலகின் மிகக் கடுமையான வைரஸ் கட்டுப்பாட்டுக்கு கீழ் வாழ்ந்து வந்த ஸ்பெயினில், தற்போது வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றது.

எனினும், இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்காக, வெளிநாட்டுப் பயணிகள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்படுவார்கள் என ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோல, ஐரோப்பாவில் மிக மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பை எதிர்கொண்ட 47 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஸ்பெயினில், சமூக விலகள் விதிகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது.

ஸ்பெயினுக்கு ஒரு வருடத்திற்கு சுற்றுலாவுக்காக 80 மில்லியன் மக்கள் வருகை தருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...