Main Menu

வீரமரணம் அடைந்தவர்களுக்கு நீதி கிடைக்கா விட்டால் அது மிகப் பெரிய வரலாற்று பிழையாகி விடும் – மன்மோகன் சிங்

லடாக்கில் சீன வீரர்கள் தாக்கியதில் இந்தியவீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தமைக்கு நீதி கிடைக்காவிட்டால் மிகப் பெரிய வரலாற்று பிழை ஆகிவிடும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 15ம் திகதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது இராணுவவீரர்கள் 20 பேரை இழந்து நிற்கிறோம்.

தேசத்திற்காக தங்கள் சேவையின் போது உயிர் தியாகம் செய்துள்ளனர். தங்களுடைய கடைசி மூச்சிருக்கும் வரை தாய்நாட்டை காக்க போராடியுள்ளனர். இதற்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லையில்  நாட்டின் இறையாண்மையை காப்பதற்காக போராடி இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததமைக்கு  நீதி கிடைப்பதை பிரதமரும்  இந்திய அரசும் உறுதி செய்ய வேண்டும்.

இந்திய அரசு எடுக்கும் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் அடிப்படையில் தான்  எதிர்காலத்தில்  நமது சந்ததியினர்  நம்மை தெரிந்து கொள்கின்றனர். நமது ஜனநாயகத்தில்  அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய இடத்தில் பிரதமர் அலுவலகம் உள்ளது.

இதனால் தேசத்தின் நலன் குறித்த தனது வார்த்தைகள் மற்றும் முடிவுகளையும் பிரதமர் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் சோ ஏரியை சட்டவிரோதமாக உரிமை கோரும் சீனா அங்கு ஏப்ரல் மாதம் முதல் ஊடுருவி வருகிறது.

இது போன்ற அச்சுறுத்தலுக்கு இடம்கொடுத்து  அந்த பிராந்தியத்தின் இறையாண்மைக்கு சமரசம் செய்து கொள்ளக்கூடாது.  இந்த அச்சுறுத்தலை முறியடிக்க நாம் அனைவரும் ஒரே தேசமாகவும்,   ஒற்றுமையாகவும் இருக்க வேண்டிய நேரம். தவறான தகவல் அளிப்பது சிறந்த தலைமைக்கு அழகல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...