Main Menu

விவசாயிகளின் போராட்டம் : இதுவரை 248 பேர் உயிர் இழந்துள்ளதாக அறிவிப்பு!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 248 பேர் உயிரிழந்துள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 87 நாட்களில் மாரடைப்பு, குளிர் மற்றும் நோய் காரணமாக, வாரத்திற்கு சராசரியாக 16 விவசாயிகள் மரணித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடந்த வந்தபோது ஒரு வாரத்தில் பிரச்சினை தீர்ந்து விடும் என்று நினைத்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாப்,  ஹரியாணா மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்  தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதியில்  பல நாட்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர்.

மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் இரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தப் போராட்டத்துக்கும் டிசம்பர் 8 ஆம் திகதி விடுத்த ஹபாரத் பந்த்’ போராட்டத்திற்கும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.

மத்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ள நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

நாடாளுமன்றத்தைக் கூட்டி 3 வேளாண் சட்டங்களை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அந்த சட்டங்களை முழுமையாக இரத்து செய்வதற்குப் பதிலாக சர்ச்சைக்குரிய பகுதிகளைத் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு தயாராகவுள்ளது.

இந்தச் சட்டங்களைப் பார்த்து விவசாயிகள் அச்சப்பட எதுவும் இல்லை எனவும்  அரசு கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...