தவெக அரசு பதவியேற்ற பிறகு முதல்முறையாக முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை இன்று கூடுகிறது
தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற பிறகு, முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக அக்கட்சித் தலைவர் விஜய் கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் முதல்வர் விஜய் உட்பட மொத்தம் 35 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் வளர்ச்சிப் பணிகள், நலத் திட்டங்களை கண்காணித்து விரைந்து செயல்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் 3-ம் தேதி நியமனம் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும். சில தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர, பட்ஜெட் தாக்கல் செய்வது, அதில் இடம்பெற வேண்டிய சிறப்பு அம்சங்கள், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய கருத்துகள் உள்ளிட்டவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
