Main Menu

லெபனானுக்கு உதவி வழங்கும் மாநாட்டை கூட்ட மக்ரோன் திட்டம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் லெபனானிற்கு அடுத்து வரும் 06 வாரங்கள் மிகவும் நெருக்கடியானது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

எனவே, அந்நாட்டுக்கு உதவும் வகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் உதவித்திட்டங்களுக்கான மாநாடு ஒன்றை நடத்த அவர் முன்வந்துள்ளார்.

அத்துடன், ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஒரு அரசாங்கத்தை விரைந்து அமைக்குமாறு அந்நாட்டின் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்ரோன் நேற்று லெபனானுக்கு விஜயம் மேற்கொண்டார்.

அவர் லெபனானைச் சென்றடைவதற்கு முன்பதாக, அந்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக இணங்கியுள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ருட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற துறைமுக நகர் வெடிப்புச் சம்பவத்தை அடுத்து அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் ராஜினாமா செய்தது. குறித்த பெரும் வெடிப்பு சம்பவத்தால் குறைந்தது 190 பேர் கொல்லப்பட்டதுடன், 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

அதுமட்டுமல்லாது மிகப்பெரும் சொத்தழிவுகளும் ஏற்பட்டன. பலர் இருக்க வீடுகள் இன்றி தெருவுக்கு வந்துள்ளனர். ஏற்கனவே, பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த அந்நாடு மேலும் மோசமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதியின் நேற்றைய விஜயத்தின் போது பாதிப்புக்குள்ளான துறைமுக நகரத்தை அவர் பார்வையிட்டதுடன், வெடிப்புச் சம்பவத்தின் போது உயிர் தப்பியவர்களையும் சந்தித்து உரையாடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...