Main Menu

ரஷ்யாவின் முயற்சி வீணானது: கொவிட்-19 தடுப்பூசியில் பக்க விளைவு இருப்பதாக தகவல்!

ரஷ்யா உருவாக்கியுள்ள ‘ஸ்புட்னிக்-வி’ என்று அழைக்கப்படுகிற கொவிட்-19 தடுப்பூசியில், பக்கவிளைவு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியை செலுத்திய தடுப்பூசி பின்னர், ஏழு தன்னார்வலர்களில் ஒருவர் பக்கவிளைவுகளுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

40 ஆயிரம் தன்னார்வலர்களில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.

இவர்களில் 14 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தப்பட்ட 24 மணி நேரத்தின் பின்னர் தசை வலி, வீக்கம் மற்றும் அவ்வப்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற பக்க விளைவுகளை சந்தித்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் முராஷ்கோ கூறியுள்ளார்.

‘ஸ்புட்னிக் வி’ இன்னும் பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகளை முடிக்கவில்லை. எனினும் கடந்த மாதம் ரஷ்ய அரசாங்கத்தால் இது அங்கீகரிக்கப்பட்டது.

உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அவை பல்வேறு கட்டங்களாக மனிதர்களின் உடலில் செலுத்தி சோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக கொவிட்-19 தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யாவின் செஷெனோவ் பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.

மனித மருத்துவ பரிசோதனையின் ஆரம்ப முடிவுகள் செப்டம்பர் 4ஆம் திகதி, பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் ‘த லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. இதில் மருத்துவ முடிவுகள் திருப்தி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் முன்னதாக, உலகில் முதன் முதலாக கொவிட்-19 தடுப்பூசியை கண்டுபிடித்த பெருமையைப் பெற தீவிரமாக செயற்பட்டுவரும் ரஷ்யாவின் முயற்சியால், ஆபத்து நேரலாம் என ஜோர்ஜ் டவுன் பல்கலைகழக சுகாதார வல்லுனர், லாரன்ஸ் கோஸ்டின் எச்சரித்திருந்தார்.

மூன்றாம் கட்ட ஆய்வை மேற்கொள்ளாமல், தடுப்பூசி மருந்து தயாரிக்க அனுமதி அளிப்பது ஆபத்தானது என அவர் கூறினார்.

இதேவேளை, உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகநாடுகள் கடுமையாக போராடி வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பரவலான பயன்பாட்டை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...