Main Menu

ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்

ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதால் மாஸ்கோ நகரத்தின் மத்திய பகுதி குலுங்கியது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனை கண்டித்தும், தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் கடந்த மாத மத்தியில் மாஸ்கோ நகர மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எதிர்க்கட்சியினர் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த போராட்டத்தை போலீசார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கினர்.

அங்கீகரிக்கப்படாத பேரணியில் ஈடுபட்டதாக கூறி சுமார் 1,500 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் பலர் விடுவிக்கப்பட்ட போதும், ஒரு சிலரை தேர்தல் முடியும் வரை சிறையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசின் இந்த ஒடுக்கு முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, ஆகஸ்டு 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மட்டும் மக்கள் அமைதி பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் நடந்த அங்கீகரிக்கப்பட்ட போராட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதால் மாஸ்கோ நகரத்தின் மத்திய பகுதி குலுங்கியது. போராட்டத்தின்போது அங்கு மழை பெய்தது. ஆனாலும் போராட்டக்காரர்கள் அதனை பொருட்படுத்தாமல் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட போராட்டம் என்றபோதிலும், போராட்டக்காரர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 130-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி சென்றனர். 

பகிரவும்...