Main Menu

மேற்கு வங்காளம், அசாமில் முதல் கட்ட தேர்தல்- 77 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

கோடை வெயில் மற்றும் கொரோனா காரணமாக இந்த தடவை வாக்குப்பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை பல்வேறு கட்டங்களாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல அசாமில் மார்ச் 27-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி அசாமில் 47 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளுக்கும் என மொத்தம் 77 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு ஆரம்பித்தது. ஆனால் 6 மணிக்கெல்லாம் இரு மாநிலங்களிலும் வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வர தொடங்கி விட்டனர்.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக 77 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. ஓட்டுப்பதிவை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய துணை நிலை ராணுவ வீரர்களும், உள்ளூர் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 77 தொகுதிகளிலும் காலை முதலே விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

காலை 9 மணி வரை முதல் 2 மணி நேரத்தில் அசாம் மாநிலத்தில் சுமார் 9 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மேற்கு வங்காளத்தில் சுமார் 8 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 11 மணியளவில் 2 மாநிலங்களிலும் தலா சுமார் 25 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்காளர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி இடைவெளி விட்டு வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. இதற்கிடையே ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வெப்ப பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு வாக்காளருக்கும் கையுறை வழங்கப்பட்டது. அதை அணிந்து வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தங்களது வாக்கை பதிவு செய்தனர். முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டது.

வாக்களித்த பிறகு கையுறையை அந்த பகுதியிலேயே உள்ள குப்பைத்தொட்டியில் போடுவதற்கும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து இருந்தது. இதன்காரணமாக வாக்காளர்கள் கொரோனா அச்சுறுத்தல் பயம் இல்லாமல் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

கோடை வெயில் மற்றும் கொரோனா காரணமாக இந்த தடவை வாக்குப்பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடவை கூடுதல் வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு உள்ளது.

மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இன்று தேர்தல் நடக்கும் 30 தொகுதிகள் 5 மாவட்டங்களில் அடங்கி உள்ளன. இந்த 5 மாவட்டங்களும் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும்.

இன்று வாக்குப்பதிவு நடந்து வரும் 30 தொகுதிகளில் தலா 29 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த 30 தொகுதிகளில் 10 ஆயிரத்து 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

இவர்கள் பயமின்றி வாக்களிப்பதற்காக 684 மத்திய துணை நிலை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். என்றாலும் அதையும் மீறி சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

2 தொகுதிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது மர்மமனிதர்கள் தாக்குதல் நடத்தினார்கள். பதேஷ்பூர் தொகுதியில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அந்த பகுதிகளுக்கு கூடுதல் துணை நிலை ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேற்கு மித்னாப்பூர் தொகுதியில் பா.ஜனதா தொண்டர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் அந்த தொகுதியில் இன்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

மேற்கு வங்காளத்தில் பகவான்பூர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரிகளை சில மர்ம மனிதர்கள் அச்சுறுத்தினார்கள். வாக்காளர்களையும் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள். இதனால் அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தனர். அந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு படையும், அதிரடி படையும் விரைந்தது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று பா.ஜனதா தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இன்று முதல் கட்ட தேர்தல் நடந்து வரும் 47 தொகுதிகளில் சுமார் 81 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 11 ஆயிரத்து 537 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அசாம் முதல்-மந்திரி சர்வானந் சோனாவால் மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன்போரா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பிறகு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

அசாமில் 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ந் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதியும் நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26, 29-ந் தேதிகளில் அடுத்த 7 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன. மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

பகிரவும்...