Main Menu

முல்லைத்தீவில் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம்: சிறு பதற்ற சூழலும் ஏற்பட்டது!

முல்லைத்தீவில், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது அதிகளவான பொலிஸார், புலனாய்வாளர்கள் கடமைகளில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக அவர்களை ஒளிப்படம் மற்றும் காணொளிப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க முற்பட்டபோது, அதிகளவான புலனாய்வாளர்களும் பொலிஸாரும் அவர்களை காணொளி பதிவுசெய்ய முற்பட்டநிலையில் சிறிது முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலையில் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிடாது போராட்டக்காரர்கள், மாலை இரண்டு மணியளவில் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.

இதன்பின்னர், ஆலயத்தில் இருந்து வெளியேறி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அரசியல் பிரதிநிதிகள், “நாட்டில் ஊடக சுதந்திரம் உள்ளதாக கூறப்படுகின்றபோதும் கருத்துத் தெரிவிக்கின்ற அரசியல்வாதிகள், பொது மக்களை அச்சுறுத்தும் வேலையில் அரசாங்கம் முனைப்போடு உள்ளதை பிரதிபலிக்கும் வகையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, எங்களுக்காக உயிரிழந்த உறவுகளை நினைவுகூருகின்ற உரிமையை மாறிமாறி வருகின்ற அரசாங்கங்கள் தடை விதிக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.

எங்களுக்காக உயிர் நீத்த உறவுகளை நினைவுகூருவதற்கான அனைத்து உரிமைகளும் எங்களுக்கு உண்டு. அவ்வாறான நினைகூரல் நிகழ்வுகளில் பொலிஸார், புலனாய்வாளர்களின் தலையீடுகள் தவிர்க்கப்பட்டு சுதந்திரமாக நாங்கள் உயிரிழந்தவர்களை அஞ்சலி செய்வதற்கு அனுமதியளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிரவும்...