Main Menu

முறையற்ற விதத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுதல் பாரிய அழிவை ஏற்படுத்தும் – WHO எச்சரிக்கை

உலகின் பல நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, சீரான இடைவெளியிலேயே தளர்த்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோன வைரஸ் பரவலை அடுத்து உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுவரும் மனித அழிவுகளை தடுக்கும் நோக்கில் உலகின் பல நாடுகளில் நாடளாவிய முடக்கம் மற்றும் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த முடக்கம் ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கப்பட்டு வருவதால், வைரஸ் பரவல் அச்சுறுத்தல் குறைந்த பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவதற்கு சில நாடுகள் தீர்மானித்துள்ளன.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகள் படிப்படியாகவும், சீரான இடைவெளியிலும் தளர்த்தப்படாவிட்டால் வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்துள்ள அவ்வமைப்பு, முறையற்ற விதத்தில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் நாடுகள் வைரஸ் பரவலால் ஏற்படும் மறு அலையினை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளது.

அத்துடன் ஊரடங்கு நடைமுறையானது பயனுள்ள நடவடிக்கை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கொரோனா பரவல் காலத்தில் மக்கள் ஊரடங்கு நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் புதிய வாழ்க்கை முறை ஒன்றுக்கு தம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் மேற்கு பசுபிக் பிராந்திய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை, குறித்த நோய்த்தொற்றினை தடுப்பதற்கான நடவடிக்கைகள் யாவும் இயல்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இதுவரை உலகளாவிய ரீதியில் 170,455 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...