Main Menu

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழங்கப்பட்ட யானையை வனத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க உத்தரவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட யானையை வனத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தமானைச் சேர்ந்த மாசன் என்பவர் மலாச்சி என்ற யானையை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்க, இந்திரா என்பவருக்கு பெயர் மாற்றம் செய்து அனுப்பி வைத்தார்.

ஆனால் அவர் கோவில் நிர்வாகத்திடம் யானையை ஒப்படைக்காமல்,  திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க செய்தும், பிச்சை எடுக்க வைத்தும் துன்புறுத்தியதாக முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேலும் யானையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரினார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், யானையை துன்புறுத்திய இந்திராவுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் யானையை துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதால், அதனை வனத்துறை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உத்தரவிட்டதோடு, யானையை முகாமிலோ, மிருக காட்சி சாலையிலோ வைத்து பராமரிக்கும்படி வனத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

பகிரவும்...