Main Menu

மாரடைப்பை ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்

புகைபிடிப்பதை விட காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அதிக மாரடைப்புகள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள ஜெயதேவா இதய நோய் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், செயின்ட் ஜான்ஸ் ஆராய்ச்சி மையம், நிம்கான்ஸ் அமைப்பு ஆகியவை இதய நோய் பாதிப்பு தொடர்பாக ஆய்வு ஒன்றை 2 ஆண்டுகளாக நடத்தியது.

நாளை சர்வதேச இதய தினம் நடப்பதையொட்டி இந்த ஆய்வு அறிக்கையை அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

இந்த ஆய்வில் புகைபிடிப்பதை விட காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அதிக மாரடைப்புகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

அதாவது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 35 சதவீதம் பேர் காற்று மாசினால் இந்த நோய்க்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்தது.

2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இது சம்பந்தமாக ஆய்வுகளை இந்த அமைப்புகள் மேற்கொண்டன.

இதய ரத்தக்குழாய் நோயால் பாதிக்கப்பட்ட 2,400 பேரை தேர்வு செய்து இந்த ஆய்வை நடத்தினார்கள். அவர்கள் அனைவரும் 40 வயதுக்குட்பட்டவர்கள்.

இதில், 26 சதவீதம் பேர் தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் இருப்பவர்கள். 15 சதவீதம் பேர் விவசாயிகள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள். 12 சதவீதம் பேர் தொழில்நுட்ப ஊழியர்கள்.

6.5 சதவீதம் பேர் குடும்ப பெண்கள். 24 சதவீதம் பேர் டிரைவர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் காற்று மாசு இதய நோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது தெரிய வந்தது.

ஆரம்பத்தில் புகை பிடிப்பதால் இந்த நோய்க்கு ஆளாகுவோர் அதிகமாக இருந்தார்கள். இப்போது காற்று மாசு இதற்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது.

இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவில் இடம் பெற்ற ஜெயதேவா இதயநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மஞ்சுநாத் கூறியதாவது:-

எங்கள் ஆய்வில் புகை பிடிப்பவர்களை விட காசு மாற்றால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிக அளவில் இதய நோய்க்கு ஆளாகி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது ஒரு லட்சம் பேரில் 200 பேருக்கு காற்று மாசினால் இதய நோய் ஏற்படுகிறது.

காற்று மாசு உடலின் ரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபினிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது ஹீமோ குளோபினில் கார்பாக்சி அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. இது, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

குறிப்பாக வாகன டிரைவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் அதிக இளைஞர்கள் காற்று மாசினால் இதய நோய்க்கு ஆளாகிறார்கள். அது, மாரடைப்பை உருவாக்குகிறது.

ஒரு நபர் டிராபிக் சிக்னலில் 5 நிமிடம் நின்றிருந்தால் அதனால் ஏற்படும் காற்று மாசு 5 சிகரெட் புகைப்பதற்கு சமமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

முன்பெல்லாம் காற்று மாசுவினால் சுவாசக் கோளாறு நோய்கள் ஏற்பட்டன. ஆனால், இப்போது இதயத்தை அது பாதிக்க செய்வது ஆய்வில் தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...