Main Menu

மன்னார் பாலியாற்றில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு -அணைக்கட்டு இடிந்து விழும் நிலையில்

மன்னார் – பாலியாற்று அணைக்கட்டுப் பகுதியில் இரவு பகலாக தொடர்ச்சியாக மணல் மண் அகழ்வு செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அடம்பன் குளம் , பெரிய வெள்ளாங்குளம் , முள்ளிக்குளம் , உயிலங்குளம் , போன்ற பகுதிகளில் உள்ள 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தியும் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே வடக்கு மாகாண ஆளுநர் இவ்விடையத்தில் தலையிட்டு பாலியாற்று மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

-இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

பாலியாற்று அணைக்கட்டானது 1978 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அது சேதமடைந்த பின் 2012ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு ஊடாக அடம்பன் குளம் , பெரிய வெள்ளாங்குளம் , உயிலங்குளம் , போன்ற பகுதிகளில் உள்ள பெரிய ,சிரிய நீர்ப்பாச குளங்களினூடாக சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பயிரிடப்படுகின்றது.

அணைக்கட்டுகளின் அருகில் ஒரு நாளைக்கு 150 டிப்பருக்கும் அதிகமாக மணல்கள் எடுக்கப்படுகிறது.நீர் ஊற்று வரும் வகையில் மணல் அகழ்வு செய்யப்படுவதுடன் உழவு இயந்திரங்கள் மூலமாக இரும்புத்தகடுகளை பொருத்தி ஆற்றுக்குள் இருந்து மணல்களை கரைக்கு வழித்துக்கொண்டு செல்கின்றனர்.

இதனால் கரையோரங்களில் உள்ள பெரிய மரங்கள் பல விழுந்துள்ளதுடன் அணைக்கட்டுப் பகுதிகளும் மணல் அரிப்பினால் விழும் நிலையில் உள்ளது. அப்படி இந்த அணைக்கட்டு சேதப்பட்டு உடையுமானால் உடனடியாக எவரும் சீரமைத்துத் தருவதற்கு முன்வர மாட்டார்கள்.

இதனால் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களும் 800 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களும் பாதீப்படையும்.இந்த அணைக்கட்டில் நீர் தேங்கி இருப்பதனால் கிராமங்களில் உள்ள வீட்டுக் கிணறுகளில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. இதன் மூலம் மேட்டு நில பயிர்ச் செய்கையும் பாரிய அளவில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மணல் அகழ்வை தடுத்து நிறுத்தாவிட்டால் இன்னும் இரண்டு வருடங்களில் அணைக்கட்டு முற்றாக அழிந்து விடும் அபாயம் உள்ளது.பாலியாற்று மணல் அகழ்வு தொடர்பாக அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பல வருடங்களாக தெரியப்படுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

-எனவே வடக்கு மாகாண ஆளுநர் தலையிட்டு பாலியாற்று மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தி எமது ஆற்று நீர் வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தினையும் பாதுகாக்க உதவுமாறு அப்பகுதி விவசாய அமைப்புகள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பகிரவும்...