Main Menu

“எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால், எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது”

“கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் சரியான பாதையில் செல்ல வேண்டும் தற்போது கூட்டமைப்பின் பாதை ஒழுங்கீனமானது. எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது எனவே மக்களை பாதுகாக்கவே நாம் கிழக்கு மாகாணத்திற்கு அடிக்கடி பயணம் செய்கிறோம்” என முன்னாள் வட மாகாண அமைச்சரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தில் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

கல்முனையில் சனிக்கிழமை (20) மாலை 4 மணியளவில் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தனது கருத்தை கூறினார்.

வட மாகாண அரசியல் தலைமைகள் ஏன் அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தை குறிவைத்து செயல்படுகின்றனர் இது அம்பாரை மாவட்டத்திற்கு கிடைக்கின்ற ஒரே ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதற்காகவா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்

“நாங்கள் கூட்டமைப்பை சிதைப்பதற்காக கிழக்கில் களமிறங்கவில்லை கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக அழுத்தத்தை கொடுப்பதற்காகவே கிழக்கிற்கு விஜயம் செய்கின்றோமே தவிர வாக்குகளை சிதைப்பதற்காகவல்ல.நாங்கள் வடக்கிலே ஸ்திரமான நிலையில் எமது கட்சி காலூன்றாத நிலையில் கிழக்கில் அரசியல் செய்வது நமது நோக்கமல்ல.

கூட்டமைப்பின் தலைமை உள்ள கிழக்கு மாகாணத்தில் பல இடங்கள் பறிபோயுள்ளது இவற்றைக் கூட கூட்டமைப்பு சரிவர செய்யவில்லை இதன் நிமித்தமே நாங்கள் வடக்கு கிழக்கு என்ற பாராமல் தமிழர்கள் என்ற நோக்கிலே குரல் கொடுப்பதற்காக வருகின்றோம்.கிழக்கில் உள்ள மக்கள் தங்களுக்கான சரியான தலைமைகளை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் நாங்கள் ஒரு போதும் வடக்கிலிருந்து வந்து கிழக்கிலே தேர்தலில் இறங்கப் போவதில்லை.

விடுதலைப் போராட்டத்தில் கூட பலவற்றை இழந்து இருக்கிறார்கள் வடக்கில் நிலைமை வேறு கிழக்கின் நிலைமை வேறு காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட நெருக்கடிகளை கிழக்கு மக்கள் அனுபவித்து வருகிறார்கள் . எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. யாருக்கும் அஞ்சி வடக்கு வேறு கிழக்கு வேறு என வேறுபடுத்த தயாரில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக சரிவர குரல் கொடுக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் உங்களை பலர் விமர்சிக்கின்றனர் இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?

2014 மார்ச்சில் இருந்து வெறும் அறிக்கை மாத்திரம் அல்ல அவர்களுடைய சரியான விவரங்கள் வரை ஐநா சபைக்கு வழங்கியுள்ளேன். காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக நான் காத்திரமாக செயற்பட்டு வருகிறேன் . இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான விடயங்களில் யாரோ ஒருவரது நிகழ்ச்சி நிரலின் கீழ் போய்க் கொண்டு இருக்கிறார்கள். எனவே இதனை பெரிய விடயங்களாக பார்க்காமல் எம்மால் முடிந்ததை செயற்படுத்துவது எமது நோக்கம்” என தெரிவித்தார்.

பகிரவும்...