Main Menu

மத்திய கிழக்கில் அமெரிக்கா பதற்றத்தை அதிகரிக்கின்றது – கடுமையாகச் சாடும் சீனா!

வோஷிங்ரனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான மோதலில் தன் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்கா பதற்றத்தை அதிகரிப்பதற்காக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

எனவே அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர், “அதிகார அரசியல் பிரபலமானது அல்லது நிலையானது அல்ல. சமீபத்திய நாட்களில் அமெரிக்காவின் ஆபத்தான ராணுவ நடவடிக்கை சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகளுக்கு எதிரானது” என கூறியுள்ளார்.

“மேலும் அமெரிக்கா தனது சக்தியை துஷ்பிரயோகம் செய்யவேண்டாம் என்றும் மேலும் நிலைமை மோசமடைவதைத் தவிர்ப்பதற்கு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொள்வதாகவும்” அவர் கூறினார்.

இதேவேளை வெளிநாட்டுத் துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈராக் பாராளுமன்றத்தின் தீர்மானத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஈராக்கிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அச்சுறுத்தியமைக்கும் சீனா கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

ஈராக்கின் பக்தாத்தில் இந்த வாரம் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானிய ராணுவத் தளபதி காசிம் சோலெய்மனி மற்றும் ஈரானிய ஆதரவு ஈராக் போராளித் தலைவர் அபு மஹ்தி அல் முஹந்திஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவமானது அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே இருநாடுகளுக்கும் இடையிலான மோதலை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...