Main Menu

பிக் பேஷ்: டக்வத் லுயிஸ் முறைப்படி பிரிஸ்பேன் அணி வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 25ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சிட்னி மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணியும், சிட்னி தண்டர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே மழைக் குறுக்கிட்டதால், போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, டொம் பென்டோன் 56 ஓட்டங்களையும், கிறிஸ் லின் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி தண்டர் அணியின் பந்துவீச்சில், டேனியல் சேம்ஸ் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் ட்ரீமெய்ன் மற்றும் பிரெண்டன் டாக்ஜெட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 120 என்ற வெற்றி இலக்கை நோக்கி சிட்னி தண்டர் அணி, துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, 5ஆவது ஓவர் நிறைவுற்ற நிலையில் மழைக் குறுக்கிட்டது. தொடர்ந்து மழைக் குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது.

இதற்கமைய பிரிஸ்பேன் ஹீட் அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்போது, அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பிரிஸ்பேன் ஹீட் அணியின் பந்துவீச்சில், ஜெக் பிரெஸ்ட்விட்ஜ் 2 விக்கெட்டுகளையும், சஹீர் கான் மற்றும் பென் லாப்லின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 19 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 2 பவுண்ரிகள் அடங்களாக 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டொம் பென்டோன் தெரிவு செய்யப்பட்டார்.

டொம் பென்டோன் இப்போட்டியில் ஒரு ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...