Main Menu

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிக வியாதிகள்- மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவண்ணாமலையில் இன்று காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் பண்பாட்டுச் சிறப்புகளால் பரவி கிடக்கிறது. 217 அடி உயர ராஜகோபுரத்துடன் கூடிய அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ள இந்த திருவண்ணாமலைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் 1989-ம் ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. 1963-ம் ஆண்டு நடந்த திருவண்ணாமலை இடைத்தேர்தல் தான் 1967 ஆட்சி மாற்றத்திற்கு அடித்த ளமாக அமைந்தது. அதே போல கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நான் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்தை திருவண்ணாமலையில் தொடங்கினேன். அது வெற்றி பயணமாக தொடங்கி தற்போது ஆட்சி பயணமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கும் அடித்தளமாக அமைந்தது திருவண்ணாமலை தான். தி.மு.க. ஆட்சியில்தான் திருவண்ணாமலை கோவிலில் முழுமையாக திருப்பணிகள் செய்யப்பட்டது. 2004-ம் ஆண்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை தொல்பொருள் துறை எடுத்துக்கொள்ள முடிவு செய்தது. அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த கருணாநிதியிடம் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். தொல்பொருள் துறை கட்டுப்பாட்டுக்குள் கோவில் வந்தால் ஆன்மீக பணியில் தொய்வு ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர். அதனை ஏற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும் அருணாசலேஸ்வரர் கோவிலை மீட்டுக் கொடுத்தோம். மதத்தின் பெயரால் அரசியல் கட்சி நடத்துபவர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்கள், சித்ரா பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்தின்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இதற்காக கலெக்டர் தலைமையில் குழு அமைத்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் காந்தி சிலையிலிருந்து திருவூடல் தெரு வரை கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. கோவிலில் முதலுதவி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. ரூ.1 கோடியே 14 லட்சம் செலவில் மின்விளக்கு மேம்பாடு செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு 13 கோவில்களுக்கு குட முழுக்கு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 131 கோவில்களில் திருப்பணிகள் நடந்து வருகிறது. மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் ஆன்மிக வியாதிகள். மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மீகத்தை பயன்படுத்த கூடாது. அறிவார்ந்தவர்கள் எங்களுக்கு ஆலோசனைகளை கூறலாம். அதனை நாங்கள் செயல்படுத்துவோம். எங்களுக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் காத்துக் கிடக்கிறது. இது தேர்தல் காலம் அல்ல மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய காலம். பொய் புரட்டு பேசி மலிவான விளம்பரம் தேடுபவர்கள் பேசுபவர்கள் பற்றி ஐ டோன்ட் கேர். அதே போல் நீங்களும் ஐ டோன்ட் கேர் என கூறிவிட்டு மக்கள் பணிகளை செய்யுங்கள். பொய்களை அனாதைகளாக விட்டுவிட்டு உண்மை வெளிச்சத்தின் துணையுடன் சென்றால் முன்னேற்றம் அடையலாம் இலக்குகளை அடையலாம். காலம் தவறாமல் கடமையை செய்ய வேண்டும். கோப்புகள் நாடாவில் கட்டுக்குள் உறங்கிக் கிடக்கும்போது ஊழல் எழுந்து உட்கார்ந்து ஊர் சுத்த புறப்பட்டு விடுகிறது என்று கருணாநிதி கூறுவார். அரசு அலுவலகங்களில் எந்தவித கோப்புகளும் தேங்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பணியாற்ற வேண்டும். இதற்காக தான் நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேரடியாக ஆய்வு செய்து வருகிறேன். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நாங்கள் மக்கள் பணியாற்றி வருகிறோம். என் மீது மக்கள் வைத்திருக்க கூடிய நம்பிக்கை நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த நம்பிக்கை என் மீது தனிப்பட்ட முறையில் வைத்த நம்பிக்கை அல்ல தமிழினம் ஒளி பெற நடந்து கொண்டு இருக்கிற திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை. அந்த நம்பிக்கையை காப்பாற்ற உங்களில் ஒருவனாக உண்மையாக உழைப்பேன். அண்ணா, கருணாநிதி காட்டிய கொள்கை வழியில் நடப்போம். அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக இந்த தமிழகத்தை உயர்த்தி காட்டுவோம். இந்த திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பதை செயல்படுத்தி காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும்...