Main Menu

மக்கள் எழுச்சிப் போராட்டம் 18ஆவது நாளாகவும் தொடர்கிறது – அலரிமாளிகைக்கு முன்பாகவும் இரவிரவாக போராட்டம்!

ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 18ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான அதிபர் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர். அது மாத்திரமின்றி நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மாத்திரமின்றி மேலும் பல தொழிற்சங்கங்களும் மதங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கொள்ளுப்பிட்டி – அலரி மாளிகைக்கு முன்னால் ‘ மஹிந்த கோ கம ‘ எனும் பெயரில் நேற்று இரவிரவாக போராட்டம் இடம்பெற்றது.

இதையடுத்து அலரிமாளிகைக்கு முன்னால் பொலிஸ் வாகனங்கள்  நடைபாதையில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இன்று அதிகாலையில் குறித்த பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமக்கு இடையூறு எற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் அவர்களின் முறைப்பாட்டை ஏற்க உரிய அதிகாரி இல்லையென பொலிஸார் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...