Main Menu

பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் செயற் பாட்டாலேயே இந்த நிலைமை – விவேக்

அஜாக்கிரதை, அலட்சியம் ஆகியவை பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 26 அடி ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிற நிலையிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிற்றர் பதிவில், “சுர்ஜித் மீண்டு வர வேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்கிரதை, அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இதுபோன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு” என பதிவிட்டுள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில், மாநில பேரிடர் மீட்புப் படையை அடுத்து, அதி நவீன உபகரணங்களுடன் 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையும் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை சுர்ஜித் என்ற இரண்டு வயது குழந்தை தவறி விழுந்தது.

சுமார் 18 மணி நேரத்திற்கு மேலாக குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின்னர் 70 அடிக்கு சென்றதால் மீட்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டது.

அத்துடன், குழாயில் மண் சரிந்து மூடப்பட்டதால் மேலும் சிக்கல் உண்டானது. இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றிவிட்டு குழந்தையை மீட்கும் முயற்சியில் தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது.

பகிரவும்...