முதலமைச்சர் விஜய்க்கு 2 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் – ரஜினிகாந்த்
மக்களின் எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் விஜய் பூர்த்தி செய்வார் என்று நம்புவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.
தேர்தலுக்கு பிறகு திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க ரஜினிகாந்த் பேசியதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியிருந்தன.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், அதுகுறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது :
“ஸ்டாலின் சேர் 40 ஆண்டுகால நண்பர். எங்களுடைய நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டேன்.
எனக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் சுமார் 25 வயது வித்தியாசம் உள்ளது. சிறுவயது முதலே அவரை பார்த்து வருகிறேன். நடிகர் சங்கம் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் விஜய்யை சந்தித்துள்ளனர்.
சம்பிரதாயத்திற்காக சென்று பார்ப்பது எனக்குப் பிடிக்காது. விஜய்க்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் நேரம் கொடுக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை விஜய் பூர்த்தி செய்வார் என்று நம்புகிறேன்.”
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
