Main Menu

பெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறுகள் நடக்காது!- K.பாக்யராஜ்

கருத்துக்களை பதிவு செய்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. நாயகனாக எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன், நாயகியாக உபாசனா நடித்துள்ளனர். பி.எம்.சினிமாஸ் தயாரித்துள்ளது. ராகுல் பரமகம்சா இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகரும், டைரக்டருமான பாக்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

‘‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’’ என்று ஒரு பட்டிமன்றத்தில் பேசி இருக்கிறேன். எனவே, பெண்கள் கவனமாக இருந்தால் தப்பு நடக்காது. பசங்களை மட்டுமே தப்பு சொல்லக்கூடாது. வள்ளுவர் கற்பை பற்றி பெண்களுக்குத்தான் அதிகாரம் எழுதி இருக்கிறார். ஆண் தவறு செய்தால் போகிற போக்கில் வந்து விடுவான். பெண்கள் தவறு செய்தால் அது மிகப்பெரிய பாதிப்பு ஆகிவிடும். ஒருவன் சின்ன வீடு வைத்துக்கொண்டால் காசு பணம் எதுவென்றாலும் கொடுத்து விடுவான். பெரிய வீட்டை தொந்தரவு செய்யமாட்டான்.

ஆனால் பத்திரிகைகளில் கள்ளக்காதலுக்காக புரு‌‌ஷனை, குழந்தையை கொன்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன. அதனால்தான் பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் என்கிறார்கள். இன்று செல்போன் வந்துள்ளதால் தாண்டி எங்கெங்கே போய்க்கொண்டு இருக்கிறார்கள். அதனால் எளிதாக தவறு நடப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுகின்றன. பொள்ளாச்சியில் தவறு நடக்க பசங்க மட்டும் காரணம் இல்லை. உங்கள் பலகீனத்தை அவன் சரியாக பயன்படுத்திக்கொண்டான்.

அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டீர்கள், அதுதான் பெரிய தவறு. என்னுடைய வெற்றிக்கு காரணம் என் கருத்துகளை சினிமாவில் பயம் இல்லாமல் பதிவு செய்ததுதான். இயக்குனரிடம் இந்த காட்சி நன்றாக இல்லை என்று வெளிப்படையாக சொல்லிவிடுவேன். அவர் கோபப்படமாட்டார். இந்த விழாவில் பெண்களை கவுரவித்தது சந்தோ‌‌ஷமாக இருந்தது.

எல்லா தியேட்டர்களிலும் பெரிய படங்கள் போலவே, சிறிய படங்களும் ஓடவேண்டும். அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு தந்தை பாதுகாப்பிற்குத்தான் போன் வாங்கி கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள். அதை இந்த படத்தில் குறிப்பிட்டு உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர், கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் கே.ராஜன், இசையமைப்பாளர் தினா, நடிகர் நட்டி, போஸ் வெங்கட், ஜே.எஸ்.கே. கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகிரவும்...