Main Menu

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ‘அடடே’ மனோகர் காலமானார்

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் அடடே மனோகர் நேற்றிரவு வயது மூப்பு காரணமாக காலமானார்.

அடடே மனேகர் ஆரம்பத்தில் தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்து கொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். அவரது தோற்றமும், குரலும் நகைச்சுவை நடிப்பிற்கு ஏற்றதாக இருந்ததால் நகைச்சுவையில் தனது திறமையை மெருகேற்றி தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். 3,500 க்கும் அதிகமான முறை அவர் மேடை நாடகங்களில் நடித்துள்ளார். கதைகளில் ஈடுபாடு கொண்டவர். அவரே பல நாடகங்களை எழுதி, நடித்துள்ளார்.

நகைச்சுவை நாடகங்களில் குறிப்பாக கிரேஸி மோகன், எஸ்.வி.சேகர் நாடகங்களில் தவறாமல் இடம்பெற்று வந்தார். 1986 ல் தூர்தர்ஷனில் வெளியான அடடே மனோகர் நகைச்சுவை தொடர் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.

நாடகத்தைத் தொடர்ந்து திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் அடடே மனோகர் நடித்தார். பதினைந்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அந்தக்கால நாடக நடிகர்களைப் போல, மேடையில் நடித்துக்கொண்டே பாடுவதில் வல்லவராக இருந்தார்.

தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய திறமைசாலிகளில் அடடே மனோகரும் ஒருவர். அவரது நான் பட்ட கடன் உள்ளிட்ட சில தொலைக்காட்சி நாடகங்கள் யூடியூபில் பார்க்கக் கிடைக்கின்றன. வாய்விட்டுச் சிரிக்க இந்த நாடகங்களும், அடடே மனோகரின் நடிப்பும் எப்போதும் தவறியதில்லை.

சென்னை குமரன் சாவடியில் வசித்து வந்தவர், நேற்றிரவு வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவரது உடல் திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...