Main Menu

பெட்ரோல், டீசல் வாகனங்களை விட மின்சார வாகனங்களால் காற்று மாசு அதிகம்: ஆய்வு முடிவு

எலக்ட்ரிக் வாகனங்கள் காற்று மாசை குறைக்கும் என்று நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசை விட, எலக்ட்ரிக் வாகனங்களிலிருந்துதான் அதிக மாசு வெளியேறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகம் வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. எனவே கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அதாவது பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தற்போது களமிறக்கப்பட்டிருக்கின்றன.

புதைப்படிவ எரிபொருளாக அறியப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை அதிக மாசை வெளியேற்றுவதாகவும், எலக்ட்ரிக் வாகனங்களிலிருந்து இப்படியான மாசு வெளியேறுவதில்லை என்றும் சொல்லப்பட்டு எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இப்படி சொல்வதில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ‘எமிஷன் அனலிட்டிக்ஸ்’ எனும் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் op-ed இல் முழுவதுமாக பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ஆய்வில் ‘டெஸ்லா மாடல் ஒய்’ மற்றும் ‘ஃபோர்டு எஃப்-150 லைட்னிங்’ ஆகிய இரண்டு கார்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இரண்டில் எது அதிக காற்று மாசை ஏற்படுத்துகிறது? எது சுற்றுச்சூழலுக்கு சிறந்தது? என்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.

‘டெஸ்லா மாடல் ஒய்’ கார் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனமாகும். இதே, ஃபோர்டு எஃப்-150 லைட்னிங் கார், வழக்கமான எரிபொருளில் இயங்கும் காராகும். இரண்டையும் ஓட்டி பார்க்கும் போது, எலக்ட்ரிக் வாகனமான டெஸ்லா மாடல் ஒய் கார் அதிக மாசை உமிழ்வது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான காரணம் காரின் எடைதான். எலக்ட்ரிக் கார்கள் பேட்ரிகளால்தான் முழுக்க முழுக்க இயங்குகின்றன. பேட்ரிகள் ஒவ்வொன்றும் 1.5 டன் எடை கொண்டிருக்கும். எனவே இந்த கார்களின் எடை வழக்கமான கார்களை விட அதிகமாக இருக்கும். எடை அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு முறையும் பிரேக்கை பயன்படுத்தும்போதும் டயர் பயங்கரமாக தேய்மானம் அடைகிறது. இதிலிருந்து வெளியேறும் துகள்கள் காற்றில் கலந்து மாசை ஏற்படுத்துகின்றன. டயர்கள் கச்சா எண்ணெயில் இருந்து பெறப்பட்ட செயற்கை ரப்பரில் இருந்து தயாரிக்கப்படுகின்றன என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். எந்த கச்சா எண்ணெய் சூழலுக்கு ஆபத்தானது என்று நாம் கருதினோமோ, அதே கச்சா எண்ணெய்யிலிருந்து உருவாகும் டயர்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் வடிவில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்களால் இப்படி ஏற்படும் மாசு என்பது, பெட்ரோல், டீசல் வாகனங்கள் ஏற்படுத்தும் காற்று மாசை விட 1,850 மடங்கு அதிகமாகும். மேலே குறிப்பிட்ட ‘டெஸ்லா மாடல் ஒய்’ மற்றும் ‘ஃபோர்டு எஃப்-150 லைட்னிங்’ ஆகிய இரண்டு கார்களை ஒப்பிடும்போது, வழக்கமான எரிபொருளில் இயங்கும் ‘ஃபோர்டு எஃப்-150 லைட்னிங்’ காரை விட ‘டெஸ்லா மாடல் ஒய்’ கார் 400 மடங்கு அதிக துகள்களை வெளியேற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...