Main Menu

புதுவையில் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்

பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுவையில் இன்று மாலை முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

புதுவை பாராளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் அரசியல் கட்சியினர் பணம் வினியோகம் செய்வதை கட்டுப்படுத்தவும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை 4 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5-க்கும் மேற்பட்டோர் பொதுஇடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம்பர பதாகைகள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...