Main Menu

கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது- மு.க.ஸ்டாலின்

கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது என்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

வலங்கைமானில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்த போது எடுத்த படம்.கும்பகோணம்:

தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அவர் நாகை பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராஜ், திருவாரூர் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

இதையடுத்து அவர் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில் தேர்தலில் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று மு.க.ஸ்டாலின் திருவாரூரிலேயே பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

இன்று காலை மு.க.ஸ்டாலின் கும்பகோணத்தில் இருந்து பிரசாரத்திற்கு புறப்பட்டார். முதலில் வலங்கைமான் பகுதியில் திறந்த வேனில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அங்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து அவர் பேசியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மறுநாளே நான் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினேன் . ஆனால் முதல்வர் ஒரு வார காலத்திற்கு பின்னர் ஹெலிகாப்டரில் வந்து விட்டு சென்றார். பிரதமர் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவில்லை என்பதோடு, ஆறுதல் வார்த்தை கூட மக்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும் தமிழக அரசு கேட்ட நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை.

இந்த நிலையில் பிரச்சாரத்தை நாகப்பட்டினம் தொகுதியில் தொடங்கி மண்ணின் மைந்தர் என்ற முறையில் பிரச்சாரத்தை இந்த தொகுதியில் முடிக்க வந்துள்ளேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம், காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் கைவிடப்படும், விவசாயக் கூலி ஆண், பெண் பாகுபாடின்றி சமமாக வழங்கப்படும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய், ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர். அண்ணா, காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியவர். 5 முறை முதல்-அமைச்சராக பதவி வகித்தவர். அவருடைய ஆசை மெரினாவில் அண்ணா சமாதியின் அருகிலே அவரது உடலை வைக்க வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்றுவதற்காக நான் நேரடியாக முதல்அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தேன். வெட்கத்தை விட்டு எடப்பாடி வீட்டுக்கு நேரடியாக சென்று கேட்டோம். ஆனால் ஆறடி நிலம் கூட கொடுக்க மறுத்துவிட்டனர். அதன் பின்னர் நீதிமன்றத்தை அணுகி கருணாநிதியின் ஆசையை நிறைவேற்றி வைத்தோம்.

நமது தலைவருக்கு, ஆறடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு, தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது. கலைஞரின் மகனாக உங்களிடம் வந்து நான் ஓட்டு கேட்கிறேன். நான் வெற்றி பெற்று கலைஞர் நினைவிடத்தில் கலைஞரின் ஆசையை நிறைவேற்றி வெற்றிக்கனியை மாலையாக வைக்க வேண்டும்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றபோது, தமிழகத்தில் 22 தொகுதி இடைத்தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே கதிர் அரிவாள் சின்னத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசுவுக்கு  வாக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

இதன்பின்னர் மு,க.ஸ்டாலின் குடவாசல், கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, நாகை, நீர்முளை, கீழ்வேளூர் வழியாக திருவாரூர் சென்றார்.

திருவாரூர் நகரில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணனுடன் வீதி வீதியாக ஆதரவு திரட்டி மாலை 6 மணியுடன் அங்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், திருவாரூரிலேயே பிரசாரத்தை இன்று நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...