Main Menu

புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்

கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவராகத் தெரிவான பொரிஸ் ஜோன்சன் இன்று பிற்பகல் 3.10 அளவில் பக்கிங்ஹம் அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து உரையாடி பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் தலைவர் என்ற முறையில் மகாராணியிடமே பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

அதன்படி பிரித்தானியாவின் புதிய பிரதமர் நியமனத்தினை பொரிஸ் ஜோன்சன் மகாராணியிடம் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் பிரதமர் அலுவலகமான டவுனிங் ஸ்ட்ரீற்றுக்குத் திரும்பிய அவர் ஊடகவியலார்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் தனது உரையில்; எனது பணி உங்களையும் உங்களது பிள்ளைகளையும் பெற்றோர்களையும் பாதுகாப்பதாகும்.

பிரித்தானியாவை எவரும் குறைத்து மதிப்பிடமுடியாது. பிரெக்ஸிற் பிரித்தானியர்களின் அடிப்படை உரிமை. எனவே அதனை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை கொடுப்பேன்.

பிரெக்ஸிற்றுக்கு இன்னும் 99 நாட்கள் இருக்கின்றன. எனவே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்தம் இல்லாமல் பிரித்தானியா வெளியேறும் என்று உறுதியளித்தார்.

நாட்டிற்கு சிறந்த கல்வி, சிறந்த மருத்துவம், சிறந்த வேலைவாய்ப்பு, பாதுகாப்பு முதலானவற்றை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவேன் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.

மேலும் 20,000 பொலிஸ் அதிகாரிகளை நியமித்தல், 20 புதிய மருத்துவமனைகளை மேம்படுத்துதல், சமூக பாதுகாப்பு, நெருக்கடியைச் சரிசெய்தல் மற்றும் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக்கூடங்களுக்கான நிதியுதவிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பகிரவும்...