Main Menu

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் – இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்லண்டன்:

28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக இங்கிலாந்து முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016-ம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர்.

ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை நிறைவேற்றுவதில் இன்னும் இழுபறி நிலை உள்ளது.

இந்த விவகாரத்தில் டேவிட் கேமரூன், தெரசா மே என 2 பிரதமர்கள் பதவி விலகியது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து கடந்த மாதம் 31-ந் தேதி விலகுவதற்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியாக இருந்தார்.

அக்டோபர் 31-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடியாமல் தாமதம் ஏற்பட்டால் சாக்கடை குழியில் விழுந்து சாவேன் என்று அவர் ஆவேசமாக குறிப்பிட்டார்.

ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் வெளியேற வேண்டும், அக்டோபர் 31 என்ற கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றம் கூறியது.

அதைத் தொடர்ந்து கெடுவை ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை நீட்டிப்பதற்கு ஐரோப்பிய கூட்டமைப்பு சம்மதம் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து மக்களின் உத்தரவை பெறுகிற நோக்கத்தில் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்தார். இது தொடர்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டது.

டிசம்பர் 12-ந் தேதி அங்கு தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை மேற்கொள்வதில் ஏற்பட்ட கால தாமதத்துக்காக நாட்டு மக்களிடம் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.

இது தொடர்பாக நேற்று அவர் அளித்த ஒரு பேட்டியில், “ ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து அக்டோபர் 31-ந் தேதிக்குள் வெளியேற முடியாமல் போய் விட்டது. இது மிகுந்த ஏமாற்றத்துக்கு என்னை ஆளாக்கி உள்ளது” என்று கூறினார்.

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கை விவகாரத்தில் போரிஸ் ஜான்சனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் விமர்சித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “பிரெக்ஸிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் ஐரோப்பிய கூட்டமைப்புடன் போட்ட ஒப்பந்தம், எதிர்காலத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை பாதிக்கும்” என கூறினார்.

இதற்கு போரிஸ் ஜான்சன் பதில் அளிக்கையில், “ ஜனாதிபதி டிரம்பின் எந்தவிதமான அவமதிப்பையும் தெரிவிக்கவிரும்பவில்லை. அதே நேரத்தில் அவர் மிகவும் பிழையாக கூறுகிறார். நமது ஒப்பந்தத்தை பார்க்கிற யாரும் அது மிகப்பெரிய ஒப்பந்தம் என்பதை உணர முடியும்” என்று கூறினார்.

Related Tags :

பகிரவும்...