Main Menu

கடற் கொள்ளையர்கள் பிடியில் சிக்கிய நார்வே கப்பல் ஊழியர்கள்

நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.வி.பொனிட்டா கப்பலின் குழுவினரை ஆப்பிரிக்க கடற்கொள்ளையர்கள் கடத்தியதாக அக்கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நைஜீரியா நாட்டின் அருகில் உள்ளது பெனின் என்ற சிறிய நாடு. அந்நாட்டின் கோட்டொனொ பகுதியில் உள்ள துறைமுகத்திற்கு கடந்த சனிக்கிழமை நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.வி.பொனிட்டா கப்பல் சென்றது. அக்கப்பலில் இருந்த 9 கப்பல் ஊழியர்கள் திடீரென மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து நார்வேயை சேர்ந்த அந்த கப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர். ஜிப்சம் இறக்குமதி செய்வதற்காக பொனிட்டா கப்பல் கோட்டொனொ துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. திடீரென  அங்கு நுழைந்த கடற்கொள்ளையர்கள் கப்பலில் இருந்த ஊழியர்களை கடத்திச் சென்றனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவர்களை பற்றிய தகவல்கள் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டவர்கள் யாரும் நார்வே குடிமகன்கள் அல்ல, அனைவரும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் என்று நார்வே கப்பல் உரிமையாளர்கள் சங்கத்தை மேற்கோள் காட்டி நார்வே ஊடகங்கள் நேற்று செய்திகள் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...