Main Menu

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி முதல் முடக்க நிலையில் தளர்வு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு ஜூலை 4 ஆம் திகதிமுதல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.

குறித்த வைரஸ் பெருந்தொற்றால் பிரித்தானியாவும் பாதிப்புக்கு இலக்காகியிருந்த நிலையில், இங்கிலாந்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 04ம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளன.

இவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை தொடர்ந்து முடக்க காலத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த களியாட்ட விடுதிகள், உணவகங்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் மீளத் திறக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வாய்ப்புள்ள இடங்களில் மக்கள் இரண்டு மீட்டர்கள் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை ஒருமீட்டருக்கும் அதிகமான தனிமனித இடைவெளியை பேணும் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு வெவ்வேறு வீடுகளை சேர்ந்த குடுப்ப உறுப்பினர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஒரு வீட்டில் சந்தித்துக்கொள்ளவும், இரவு முழுவதும் தாங்கிக்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான சந்திப்புகளில் பிரத்தியேக உறவு முறைகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த தளர்வுகள் யாவுமே தேவைப்பட்டால் மீள கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படக்கூடியவை என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டெர்ஜன் மற்றும் வேல்ஸ் முதல் மந்திரி மார்க் டிராஃபோர்ட், 2 மீட்டர்கள் விதிமுறையானது தமது பிராந்தியங்கள் மேலும் சில காலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த தளர்வு நடவடிக்கைகளில் உள்ளக உடல் வலுவூட்டல் நிலையங்கள், நீச்சல் தடாகங்கள், உள்ளக விளையாட்டு அரங்குகள் மற்றும் அழகு நிலையங்கள் ஆகியன உள்ளடக்கப்பட மாட்டாது எனவும், அவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமண நிகழ்வுகளில் 30 பேர் பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வழிபாட்டுத் தலங்களில் ஆராதனைக்ளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நூலகங்கள், சமூக நிலையங்கள், அருங்காட்சியகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், பூங்காக்கள் மற்றும் திரையரங்குகள் என்பனவும் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை 3 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 42 ஆயிரத்து 650 பேரளவில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...