Main Menu

பிரிகேடியர் பிரியங்கவின் விலக்குரிமையை பிரித்தானியா மதிக்க வேண்டும் – சிறிலங்கா

பிரித்தானியாவின் பொது ஒழுங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு, இராஜதந்திர விலக்குரிமை உள்ளது என்றும், அதனை பிரித்தானியா மதித்து நடக்க வேண்டும் என்றும் சிறிலங்கா கோரியுள்ளது.

2018 பெப்ரவரி 4ஆம் நாள் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கி, கழுத்தை அறுத்து விடுவது போன்று எச்சரிக்கை செய்திருந்தார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ.

இந்த விவகாரத்தினால் எழுந்த நெருக்கடிகளை அடுத்து, சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டார்.

எனினும், அவருக்கு எதிராக வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் மயூரன் சதானந்தன் என்பவர், வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் மீள்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைகளின் பின்னர் இந்த வழக்கு வரும் நெவம்பர் 19ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதேவேளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், லண்டனில் உள்ள தூதரகத்தில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இராஜதந்திரியாக பணியில் இருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பதால், அவருக்கு வியன்னா இராஜதந்திர உறவுகள் குறித்த 1961ஆம் ஆண்டின் பிரகடனங்களின் அடிப்படையில் விலக்குரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்தக் கடப்பாட்டை பிரித்தானிய அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று கோருவதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பகிரவும்...