Main Menu

தேர்தலில் ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பது தற்கொலைக்கு சமனானது- பைசல் காசிம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பது தற்கொலைக்கு சமனானதென சுகாதார சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பைசல் காசிம் மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் கிழக்கு மாகாண சபை ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி இருப்பது அவருடைய பல்கலைக்கழகம்  இருக்கின்ற பிரச்சினைகளை ஒரு காலகட்டத்தில் தீர்த்துக் கொள்ள முடியுமென்ற யோசனையாக கூட இருக்கலாம்.

இது ஒரு தற்கொலை வேலைத்திட்டம் என்றுதான் நான் கருதுகிறேன். மேலும் கோட்டாபய ராஜபக்ஷவின் தரகராகதான் ஹிஸ்புல்லா வேலை செய்கிறார்.

இதேவேளை முஸ்லிம்கள் மட்டுமல்ல சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்த பல கோரிக்கைகளை கடந்த கால ஆட்சியாளர்களுடன் செய்திருக்கின்றோம். ஆனால் அவற்றில் பலவற்றில் வெற்றி கொண்டிருக்கின்றோம் சில நடைபெறாமல் போயிருக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன்  மேற்கொண்ட சந்திப்பின் ஊடாக அவர் கூறும் வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் செயற்படுகின்றோம்.

மேலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரச்சினைகள், காணிப்பிரச்சினை போன்ற விடயங்களை இழுத்தடிப்பு செய்யாமல்  குறிப்பிட்ட சில காலங்களுக்கு முடித்து தருவதாக சஜித் உத்தரவாதம்  வழங்கியிருக்கிறார்.

ஆனாலும் ஜனாதிபதித் தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு அவசியமற்றது. நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி ஆட்சிக்கு வருமானால் நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை தொடர முடியும். அதற்காகவே நாங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டி இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...