Main Menu

பிரான்ஸில் கட்டுப் பாடுகள் தளர்வு – ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான போக்கு வரத்துக்கும் அனுமதி

பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவலடையத் தொடங்கியதன் பின்னர் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் பல தளர்த்தப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு அவர் நேற்று ஆற்றிய உரையிலேயே குறித்த தளர்வுகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தீவிரமடையத் தொடங்கியதன் பின்னர் நாட்டு மக்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி ஆற்றிய நான்காவது உரை இதுவாகும்.

குறித்த அறிவுறுத்தல்களுக்கு அமைய நாடளாவிய ரீதியில் இன்று முதல் கஃபேக்கள் மற்றும் உணவங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வருவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஓய்வு இல்லங்களில் உள்ள தங்கள் உறவினர்களையும் சென்று சந்தித்து வருவதற்கு குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை இன்று மீளத்திறந்துள்ள நிலையிலேயே பிரான்ஸ் அரசாங்கமும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரான்ஸ் தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனாலும் வைரஸ் மீண்டும் பரவும் ஆபத்து உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தனது தொலைக்காட்சி உரையில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் சில பகுதிகளில் ஏற்கனவே கட்டுப்பாடுகளுடன் நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவகங்கள் மீள இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் பரிஸ் பிராந்தியத்திலும் இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக தலைநகர் பரிஸ் காணப்படும் நிலையில் இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர் நிலைப்பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்தும் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பகிரவும்...