Main Menu

பாராளுமன்றத்தில் முதலாவது வாக்கெடுப்பிலேயே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தோல்வி!

ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றை தடுப்பதற்கான சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான தற்போதைய ஆளும் தரப்பு தோல்வியடைந்துள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிற்றை தடுப்பதற்கு ஆதரவாக 328 வாக்குகளும், எதிராக 301 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதன்மூலம், “ஒப்பந்தம் இல்லாமலேனும் பிரெக்ஸிற்றை நிறைவேற்றுவேன்” என்ற வாக்குறுதியோடு அண்மையில் பதவியேற்ற பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தான் எதிர்கொண்ட முதலாவது பாராளுமன்ற வாக்கெடுப்பிலேயே தோல்வியடைந்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பொரிஸ் ஜோன்சன் “பாராளுமன்றத் தேர்தலை குறித்த காலப்பகுதிக்கு முன்னதாக நடாத்துவதற்கு தான் விரும்புவதாகவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பைன், “பொதுத் தேர்தல் நடப்பதற்கு முன்னர் ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிற்றை தடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்”என்று வலியுறுத்தினார்.

இந்தநிலையில், பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் பாராளுமன்ற உறுப்பினர் பிலிப் லீ, லிபரல் ஜனநாயக கட்சியில் இணைந்தார். இதனால், பாராளுமன்றத்தில் பொரிஸ் ஜோன்சன் தனது பெரும்பான்மையை இழந்துள்ளார்.

இந்தநிலையில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 21 உறுப்பினர்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து அரசின் முயற்சியை தோற்கடித்துள்ளனர்.

இந்த வாக்குப்பதிவுக்கு பிறகு, கட்சியின் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் அவர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது.

பகிரவும்...