Main Menu

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி- செரீனா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

டென்னிஸ் உலகின் உயரிய அந்தஸ்து பெற்றதும், ஆண்டின் இறுதி ‘கிராண்ட்ஸ்லாம்’ டென்னிஸ் தொடருமான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

139ஆவது அத்தியாயமாக நடைபெறும் இத்தொடரில், ஆண்கள், பெண்கள் என மொத்தமாக ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

கடினத் தரையில் நடைபெறும் இத்தொடரில். உலகிலுள்ள பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இத்தொடரில் தற்போது நடைபெற்று வரும், ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,

முதலாவதாக ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகளின் சில முடிவுகளை பார்க்கலாம்,

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ஸ்டென் வவ்ரிங்கா, ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வும் மோதினர்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே டை பிரேக் வரை நீண்டது.

இதில் கடுமையாக போராடி 7-6 என செட்டைக் கைப்பற்றி, டேனில் மெட்வேடவ் அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், தனது ஆதிக்கத்தை தொடர்ந்த டேனில் மெட்வேடவ், 6-3 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார்.

இதனையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டில், பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய ஸ்டென் வவ்ரிங்கா, செட்டை 6-3 என கைப்பற்றி ஆறுதல் அடைந்தார்.

எனினும், நான்காவது செட்டில் சுதாகரித்துக் கொண்ட டேனில் மெட்வேடவ், செட்டை 6-1 என இலகுவாக கைப்பற்றி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
…………

இன்னொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.

இரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை பெடரர் 6-3 என கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை டிமிட்ரோவ் 6-4 என கைப்பற்றி, பெடரருக்கு பதிலடி கொடுத்தார்.

இதனையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டில், 6-3 என பெடரர் செட்டைக் கைப்பற்றினார்.

இதன்பிறகு நடைபெற்ற நான்காவது செட்டில், ஆதிக்கம் செலுத்திய டிமிட்ரோவ் 6-4 என கைப்பற்றி அசத்தினார்.

இருவரும் தலா இரண்டு செட்டுகளை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட் இரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

இதில் யாரும் எதிர்பாராத அளவு ஆக்ரோஷம் கலந்த நிதானத்துடன் விளையாடிய டிமிட்ரோவ், 6-2 என செட்டைக் எளிதாக கைப்பற்றி, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
………..

அடுத்ததாக பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, இங்கிலாந்தின் ஹோன்னா கொன்டாவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய எலினா ஸ்விடோலினா, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
…….

மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், சீனாவின் வாங் கியாங்குடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், எவ்வித சவாலையும் எதிர்கொள்ளாத செரீனா வில்லியம்ஸ், 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

பகிரவும்...