Main Menu

பருவ நிலை மாற்றம் தொடர்பாக நியூசிலாந்தில் மாபெரும் பேரணி!

பருவ நிலை மாற்றம் தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நியூசிலாந்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

அந்நாட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்ற நிலையில் நியூசிலாந்தில் நடைபெற்ற மாபெரும் பேரணிகளில் இதுவும் ஒன்று என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பேரணியை முன்னிட்டு நியூசிலாந்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க், உலக வெப்ப மயமாதலுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

இதன் முதற்கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை, ‘குளோபல் பருவ நிலை ஸ்ட்ரைக்’ என்ற பெயரில் பல்வேறு நாடுகளிலும் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த போராட்டத்தில் உலக அளவில் இலட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் போராட்டம் 2ஆவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பருவநிலை தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பருவ நிலை மாற்றம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் கிரேட்டா தன்பர்க் உரையாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...