நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை
நோர்வே நாட்டின் பட்டத்து இளவரசியின் மகன் பாலியல் வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நார்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டின் 29 வயதான மகன் மரியஸ் போர்க் ஹோய்பி மீது இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டிருந்தன.
ஓஸ்லோ நீதிமன்றம் இந்த வழக்குகளில் இருந்து அவரை விடுவித்தது. இருப்பினும், அவர் மீது சாட்டப்பட்ட மற்ற சில குற்றங்களில் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது உடல் நலக் கோளாறு காரணமாக நேரில் ஆஜராக முடியாத காரணத்தினால், அவர் காணொளி வாயிலாக வழக்கு விசாரணையில் பங்கேற்றார்.
குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஹோய்பிக்கு ஏழு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கக் கோரியிருந்தனர். இருப்பினும், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் 18 மாதங்கள் என்ற குறைந்தபட்ச தண்டனைக் காலத்தைக் கோரியிருந்தனர்.
மரியஸ் போர்க் ஹோய்பி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. எனினும், இந்த வழக்கு விசாரணை அரச குடும்பத்தின் மீது ஒரு நிழலைப் படரச் செய்துள்ளது. அதாவது, அவருக்கு நான்கு வயதாக இருந்தபோது, அவரது தாய் பட்டத்து இளவரசர் ஹாக்கனைத் திருமணம் செய்துகொண்டார். இதனால், ஹோய்பி அந்த அரச குடும்பத்திற்குள்ளேயே வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
