சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் 49 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
மாலியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய நைஜர் நாட்டைச் சேர்ந்தவர்கள் பயணித்த பாரவூர்தியொன்று, சஹாரா பாலைவனத்தில் பயணித்த வேளையில் பழுதடைந்ததால் அதில் பயணித்த 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நைஜர் மற்றும் அல்ஜீரியாவுக்கு இடையிலான பிரதான எல்லைக் கடவையான அசாமாகாவுக்கு மேற்கே 80 கிலோமீற்றர் தொலைவில், கடுமையான வெப்பநிலைக்கு மத்தியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தத் துயரத்திலிருந்து இருவர் மட்டுமே தப்பித்து, அசாமாகா எல்லை நோக்கி நடந்து சென்று அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
திசைமாறிச் சென்ற பாரவூர்தியை பழுதுபார்க்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், குடிநீரின்றி உயிரிழந்த பலரின் உடலங்கள் வாகனத்தின் கீழும் அதைச் சுற்றியும் மீட்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பொதுக் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த சம்பவ இடத்திலிருந்து திரும்பிய மீட்புக் குழுவினர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 நாட்களாகப் பாலைவனத்தில் தவித்த மற்றொரு வாகனத்திலிருந்த 60க்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் குடிநீர் வழங்கி, வாகனத்தையும் பழுதுபார்த்து மற்றுமொரு பெரும் துயரத்தைத் தடுத்துள்ளனர்.
