Main Menu

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்களில் 28பேர் மூன்று வாரங்களுக்கு பின் விடுவிப்பு!

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களில், 28பேர் மூன்று வாரங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு கடுனா மாநிலத்தில் உள்ள பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலையில் தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய கும்பல், 121 மாணவர்களை கடத்தி சென்றனர்.

இதன்பின்னர் அந்நாட்டு பண மதிப்பின்படி, ஒரு மாணவருக்கு தலா 5 லட்சம் நைரோக்கள் பிணை தொகையாக கொடுக்க வேண்டும் என கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்தனர்.

இதனிடையே உடல்நலனை கவனத்தில் கொண்டு அவர்களில் ஒருவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். சமையலுக்காக விறகு சேகரிக்க அனுப்பப்பட்டபோது அவர்களிடமிருந்து 5பேர் தப்பி வந்து விட்டனர்.

இந்தநிலையில் ஆயுதமேந்திய கும்பல், மேலும் 28பேரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவித்துள்ளது. இதுகுறித்து பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலையின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான ஜோசப் ஹயாப் கூறுகையில், ’28 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள், அவர்களது பெற்றோருடன் மீண்டும் இணைந்ததனர்’ என உறுதிப்படுத்தினார்.

வடமேற்கு மற்றும் மத்திய நைஜீரியாவை நீண்ட காலமாக கொள்ளையடித்து, கால்நடைகளை திருடி, அட்டூழியம் செய்துவரும் ஆயுதமேந்திய கும்பல்கள், தற்போது மற்றும் கல்லூரிகளை குறிவைத்துள்ளனர்.

பகிரவும்...