Main Menu

நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம்- உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் சங்கத் தேர்தலை ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 23ஆம் திகதி நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆனால் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என கட்டளை பிறப்பித்துள்ள நீதிமன்றம் வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.

இவ்விரு அணிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது அந்த கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. அந்த இடம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும் மாற்று இடத்தை பரிந்துரைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. இதையடுத்து, தென்சென்னை பதிவாளர் நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்ததற்கு எதிராக விஷால் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்த நிலையில் இன்று இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பகிரவும்...